செயல்களைப் பாராட்டி ஊக்கம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளைகள் தான், எதிர்காலத்தில் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் என எழுத்தாளர் மு.ஆதவன் பேசினார்

வில்லாபுரம் ராஜன் மெட்ரிக் பள்ளியின் 31வது ஆண்டு விழா, 2 நாட்கள் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் ரவி பார்த்தசாரதி தலைமை வகித்தார். முதல்வர் பாக்யப்ரியா வரவேற்றார். விழாவில் நர்சரி முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி, விளையாட்டு மற்றும் இதர பிரிவுகளில் சாதனைகள் செய்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், வழக்கறிஞர் முருகன், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டீபன் மற்றும் ‘மதுரையின் அட்சய பாத்திரம்’ நிறுவனர் நெல்லை பாலு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்தாளர் மு.ஆதவன், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது;
“பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு உற்சாகம், ஊக்கம் கொடுத்து வளர்க்க வேண்டும். அவர்கள் செய்யும் சிறிய விஷயங்களையும் பாராட்ட வேண்டும். அவர்களைப் பாராட்டித் தட்டிக் கொடுத்து வளர்ப்பதன் மூலமாக, அவர்களுக்கு சிறுவயதிலேயே தன்னம்பிக்கை கூடும். அதுவே எதிர்காலத்தில் அவர்கள் பல நல்ல விஷயங்களை துணிச்சலுடன் செய்து வெற்றி பெற அடித்தளமாகவும் அமையும்.
பள்ளி, கல்லூரிகளில் பரிசு பெறாத பிள்ளைகளில் பலர் எதிர்காலத்தில் பெரிய சாதனையாளர்களாக உயர்கிறார்கள். பள்ளியில் நடைபெறும் போட்டிகளுக்கு மட்டும் மாணவர்களைத் தயார் படுத்தாமல், வாழ்க்கையிலும் அவர்கள் வெற்றி பெறும் விதமாகத் தயார் செய்ய வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை. அவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், கல்வியில் முதல் மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நெல்லை பாலு ரொக்கப் பரிசு வழங்கி, கடின உழைப்பிற்கும் கல்விச் சாதனைக்கும் உரிய மதிப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
மாணவர்களின் வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சிகள், நடனம் மற்றும் நாடகங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் குழுவினர் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.










