• Wed. Jan 22nd, 2025

அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…

Byகாயத்ரி

Jan 3, 2022

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இதில் 2007ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்த சிறுவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 15 -18 வயதுக்குட்பட்டோர் 33.46 லட்சம் பேர் உள்ளனர். அதில், 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பள்ளிகளில் படிக்கின்றனர். எனவே, பள்ளிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டையைக் கொண்டு இணையதளத்தில் பதிவு செய்யலாம், அதே நேரத்தில் பதிவு செய்வது கட்டாயம் அல்ல என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கோடம்பாக்கம் சாலை மேட்டுப்பாளையம் மாந்தோப்பில் உள்ள பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 15 வயதிற்கு மேற்பட்ட 1,050 மாணவ- மாணவியர்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,’தமிழகத்தில் பொருளாதாரம் மீண்டு வந்துகொண்டிருக்கும் நிலையில், ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மிரட்ட தொடங்கி இருக்கிறது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகரிக்கிறது.ஓமிக்ரானை தடுப்பதற்கான கேடயம் முகக்கவசம் தான்.உயிர்காக்கும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். நிச்சயம் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் படி உங்கள் வீட்டு பிள்ளையாக கெஞ்சி அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.