மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்றதிலிருந்து பொது மக்களை அவ்வப்போது சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், கிழக்கு கடற்கரைச் சாலையில் திடீரென நடைப்பயிற்சி, சைக்கிள் பயணம் மேற்கொண்டதும், பாப்பம்பட்டி செல்லும் வழியில் வயல்களில் வேலை செய்துகொண்டிருந்தவர்களை சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். சமீபத்தில் அடையாறு பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டு, அங்குள்ள மக்களை சந்தித்தார். இப்படி, அவ்வப்போது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வருகிறார்.

இந்த வகையில், இன்று முதல்வர் பேருந்தில் மக்களுடன் பயணம் மேற்கொண்டு அவர்களின் குறைகளை கேட்டு அறிந்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று 6ஆது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அப்படி, துரைப்பாக்கத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்தார். அதை முடித்துக்கொண்டு தனது காரில் பயணம் செய்த அவர், பழைய மகாபலிபுரம் சாலையில் கார் வந்த போது தீடிரென காரை நிறுத்த சொல்லிய அவர், அங்கு வந்த தி.நகர்- கண்ணகி நகர் இடையே செல்லும் எம்19பி பேருந்தில் ஏறியுள்ளார்.
பேருந்தில் முதல்வர் ஏறியதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொரு இருக்கைக்கும் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்தோரிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் மகளிருக்கான இலவச பேருந்து பயணம் எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதையும் கேட்டறிந்தார்.