சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் திருவிழாவின் 18-வது ஆண்டாக நேற்று முன்தினம் கொல்கத்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது. அங்கு நடந்த முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு அணிகளும் மோதினர். ஆனால், நடப்பு சாம்பியன் அணியான கொல்கத்தாவை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றது.
மாலை 3.30 மணியளவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் மோதின. இதில் ராஜஸ்தான் அணியை ஐதராபாத் அணி வெயிட்வாஸ் செய்தது. அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 250-க்கும் மேல் ரன் எடுத்த அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.
இதற்கிடையே, மூன்றாவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் தொடங்கியது. இதில், ஐந்து கோப்பைகளை தன் வசம் வைத்துள்ள சென்னை மற்றும் மும்பை அணி மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இசையமைப்பாளர் அனிருத்தின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதில் தொடக்க ஆட்டகாரர்களாக நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவும், ரயான் ரிக்கில்டன் களம் இறங்கினர். அதில் ரோஹித் சர்மா 4 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். ஐபிஎல் தொடரில் இதுவரை ரோஹித் சர்மா 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக மும்பை அணியில் திலக் வர்மா 31 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் நூர் அகமது 4விக்கெட்டுகளும், கலீல் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி களமிறங்கினர்.
இதில் ராகுல் திரிபாதி 2 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்த ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்த நிலையில் 53 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய சிவம் துபே 9 ரன்களிலும், தீபக் ஹூடா 3 ரன்களிலும், சாம் கரன் 4 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். ஆனால், மறுபக்கம் ரச்சின் ரவீந்திரா ரன்களைக் குவித்துக்கொண்டிருந்தார்.
இறுதியில் சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளுக்கு 158 ரன்கள் எடுத்து அசத்தலாக வெற்றி பெற்றது. விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட்டுகளும், வில் ஜாக்ஸ் மற்றும் தீபக் சாஹர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். சென்னை அணியின் ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்து 65 ரன்களுடன் களத்தில் இருந்தார்.