• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மழைநீரில் தத்தளிக்கும் சென்னை..!

Byவிஷா

Nov 15, 2023

சென்னையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க தமிழ்நாடு அரசு பல கோடி ரூபாய்கள் செலவில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும், கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
வடசென்னை வியாசர்பாடி, வேளச்சேரி என பல பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில், சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. தண்ணீரை அகற்றி உடனே சாலையை செப்பனிட வேண்டும் என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, போரூர், தி.நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இது சலசலப்பை ஏற்படுத்தியது. சமுக வலைதளங்களில் பலர் தங்களது ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னையில் சில இடங்களில் நீர் தேங்கி யது ஏன் என்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மழைநீர் தேங்கினால் அதனை அகற்ற 180 டிராக்டர்களுடன் ஊழியர்கள் தயாராக உள்ளனர்; மீண்டும் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பல பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் சென்னையில் ஒரு மணி நேரம் மழை பெய்தாலே சுரங்கப் பாதைகள், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கும். ஆனால் இன்றும் சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் எந்த சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.
மேலும், லேசாக மழைநீர் தேங்கிய 41 இடங்களில் 31 இடங்களில் தண்ணீர் முழுமையாக வடிந்தது என்றும், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தியதால் கனமழை பெய்த போதும் பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.