• Fri. May 3rd, 2024

சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985)…

ByKalamegam Viswanathan

Sep 30, 2023

சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் ஹேமில்டன் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் பிரெட் டபிள்யூ கின்சிங்கர். தாயார் வில்லியன் அன்னா ரிக்டர். சார்லஸ் ரிக்டர் 14 மாதக் குழந்தையாக இருந்தபோது காலரா நோயால் பாதிக்கப்பட்டு பிழைப்பதே கடினம் என்ற நிலையிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தார். இவருடைய சிறுவயதில் இவருடைய பெற்றோர்கள் கருத்து வேறுபாடு காரணமாக மணமுறிவு பெற்று விலகினர். எனவே தாயார் வழித் தாத்தாவின் அரவணைப்பில் வாழ்ந்தார். 1909ல் இவரது குடும்பம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறியது. தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தோடு இணைந்த தொடக்கப்பள்ளியில் இவருடைய இளவயதுக் கல்வி தொடங்கியது. பள்ளிக்கல்வி முடிந்ததும் தனது 16 வயதில் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

வானவியலில் ஆர்வம் கொண்டிருந்த ரிக்டர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியலை முதன்மைப் பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பில் சேர்ந்தார். 1920ல் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். கலிபோர்னியா தொழில் நுட்பப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து கோட்பாட்டு இயற்பியலில் ஆய்வுகளை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். 1927ல் வாஷிங்டனில் உள்ள கார்னெகி பயிற்சி நிறுவனத்தில் தலைவராகப் பணியாற்றி வந்த நோபல் பரிசு பெற்ற இராபர்ட் மில்லிகன்(Robert Millikan) என்ற அறிவியலறிஞரின் அழைப்பை ஏற்று அங்கு ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு பைனோ கூட்டன்பர்க் என்பவரின் நட்பு கிடைத்தது. இந்நிலையில் புவியில் ஏற்படும் நில நடுக்கங்கள், அதன் காரணமாக உருவாகும் அலையியக்கங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பைனோ கூட்டன்பர்க் காட்டிய வழியில் பாசடேனா என்ற ஊரில் புதிதாக அமைக்கப்பட்ட நில நடுக்க ஆய்வுக் கூடத்தில் சேர்ந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். 1928ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த எழுத்தாள ஆசிரியராகப் பணியாற்றிவந்த லில்லியன் பிராண்ட்(Lillian Brandt) என்ற மங்கையைத் திருமணம் செய்துகொண்டார்.

கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் நில நடுக்கவியல் ஆய்வுக்கூடத்தில், தெற்கு கலிபோர்னியாவில் அப்போது ஏற்பட்ட நில நடுக்கங்கள் பற்றிய ஒழுங்கான தொடர் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வந்தன. அதனுடைய வலிமையையும் தொடர்ந்து எழ பதிவு செய்து ஆராயவேண்டிய தேவைகள் உருவாயின. கியூ வாடட்டி (Kiyoo Wadati) என்பவரின் ஆலோசனைப்படி நில நடுக்க அலைகளை உருவாக்கும் புவியின் இடப்பெயர்ச்சியைத் தொடர்ந்து அளக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது பைனோ கூட்டன்பர்க், சார்லஸ் ரிக்டர் இருவரும் அங்கு சென்று இணைந்து செயல்பட்டு நில நடுக்க வரைவுமானி (Seismograph) ஒன்றை உருவாக்கினர். அதனுடைய தீவிரத்தை(Intensity) அளப்பதற்கு மடக்கை அலகு (Logarthimic Scale) ஒன்றைப் பயன்படுத்தினார். ரிக்டர் சிறுவயதில் இருந்தே வானவியல் ஆர்வம் கொண்டவர் என்பதால் அவர் பெயரிலேயே இதற்கு ‘ரிக்டர் அளவுகோல்’ என்று பெயரிட்டனர். ரிக்டர் அளவுகோல் என்பது இயற்பியல் கருவியல்ல, கணித வாய்பாடு.

இந்த ஆய்வில் கூட்டன்பர்க் அதிகளவில் உதவிய போதும், ஆய்வுக்கான விளக்கங்களை அளிப்பதில் அவருடைய ஆர்வமின்மையால் அவருடைய பெயர் இந்த அளவுகோலில் சேர்க்கப்படவில்லை. 1935ல் இது வெளியிடப்பட்டு செயல்முறையில் பயன்படுத்தப்பட்டது. 1936 வரை கார்னெகியில் பணியாற்றிய சார்லஸ் ரிக்டர் 1937ல் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திற்கே திரும்பச் சென்று ஆய்வுப்பணிகளைத் தொடர்ந்தார். 1952ல் நிலநடுக்கப்பேராசிரியராகப் பணியேற்றார். 1941ல் இவர் கூட்டன்பர்க்குடன் இணைந்து ‘புவியின் நிலநடுக்கம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டனர். 1954ல் இந்நூல் மீண்டும் பதிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 1958ல் ‘அடிப்படை நிலநடுக்கவியல்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். இளநிலைப் பட்டப்படிப்புக்கு முற்பட்ட பாடங்களுக்குரிய ஆசிரியர்களுக்குத் தேவையான குறிப்புகளைக் கொண்டதாக இந்நூல் அமைந்தது.

1959-1960ல் ஜப்பான் சென்றார் புல்பிரைட் விருது அறிஞராக (Fulbright Scholar) அங்கு சென்று, நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழக்கூடிய பகுதிகளில் கட்டடங்களை எப்படி அமைப்பது என்பதற்கான கட்டடப் பொறியியல் வழிமுறைகளைக் கொண்ட நிலநடுக்கப் பொறியியல் என்ற பாடத்திட்டத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கினை மேற்கொண்டார். 1971ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிகழ்ந்த ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு ரிக்டரின் எச்சரிக்கைகள் கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க கலை அறிவியல்கழக உறுப்பினர், அமெரிக்க நில நடுக்க ஆய்வுக் கழகத்தின் தலைவர் என்ற பொறுப்புகளை வகித்தார். ஆனால் அந்நாட்டின் தேசிய அறிவியல் கழகத்தில் இவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

1970ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் இயற்கை ஆர்வலர் என்ற முறையில் உலகில் ‘ ஆடை அணியாமல் நிர்வாண மக்கள் வாழ்ந்து வந்த மக்கள் குடியிருப்புப் பகுதிகள் எங்கெங்கு உள்ளதோ அந்த இடங்களுக்கெல்லாம் மணைவியுடன் சென்று அவர்களைப் பற்றிய விவரங்களை அறிவதில் ஆர்வம் காட்டினார். கர்நாடக இசையில் ஈடுபாடு, அறிவியல் புனைகதைகளைப் படித்தல், தொலைக்காட்சித் தொடர்களைக் காண்பது இவருடைய பொழுதுபோக்காக இருந்தது. தென்கலிபோர்னியா மலைப்பகுதிக்குச் சென்று அங்கு நடைஉலா செல்வது இவருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும். நிலநடுக்க ரிக்டர் அளவீடு அலகினைக் கண்டறிந்த சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 30, 1985ல் தனது 85வது அகவையில் கலிபோர்னியாவில் உள்ள பாசடேனா என்ற ஊரில் மாரடைப்பால் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Related Post

“சதி”ஒழிப்பு தினம் தான் இன்று!
SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *