• Sat. Apr 20th, 2024

உ.பி.யில் பாஜக வெல்ல கை கொடுத்த மத்திய அரசின் திட்டங்கள்

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் அயோத்தி ராமர் கோவில், இந்துத்துவா கோட்பாடுகளைவிட மத்திய அரசின் திட்டங்கள்தான் பாஜக வெல்ல கை கொடுத்ததாக தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. உ.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. அம்மாநில முதல்வராக மீண்டும் யோகி ஆதித்யநாத் பதவியேற்க உள்ளார்.

இதனிடையே உத்தரப்பிரதேச தேர்தலில் மக்கள் எதனடிப்படையில் வாக்களித்தனர் என்பது குறித்து Lokniti-CSDS ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் வழக்கமான பாஜகவின் இந்துத்துவா கோட்பாடுகளைவிட மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள்தான் வாக்காளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கிஷான் சம்மான் நிதி, உஸ்வாலா திட்டம், பிரதமர் ஆவாஸ் யோஜனா, இலவச ரேஷன் பொருட்கள் போன்றவை வாக்காளர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. விவசாயிகள், பிராமணர்கள், தலித்துகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களையும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் சென்றடைந்திருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக 38% பேர் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் செயல்பாடுகளை கவனத்தில் கொண்டு வாக்களித்ததாக 10% பேர் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் ராமர் கோவில், இந்துத்துவா கோட்பாடுகளுக்காக பாஜகவுக்கு 2% பேர் மட்டுமே வாக்களித்துள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.

2017-ம் ஆண்டை ஒப்பிடுகையில் பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரித்திருக்கிறது என்கிறது இந்த ஆய்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *