• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஜாதி ரீதியான படுகொலை!!

ByM.JEEVANANTHAM

Sep 16, 2025

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த அடியமங்கலம் கிராமத்தில் வைரமுத்து என்ற இளைஞர் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதே பகுதியைச் சேர்ந்த மாலினி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட காதல் விவகாரம் தொடர்பாக வைரமுத்துவின் குடும்பத்தினருக்கும் மாலினி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

காதலர்கள் இருவரின் தந்தை ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் மாலினியின் தாயார் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலினியின் தாயார் விஜயா வைரமுத்து வேலை பார்க்கும் இருசக்கர வாகன பட்டறைக்கு நேரில் சென்று தகராறில் ஈடுபட்ட செல்போன் காட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இது தொடர்பாக காவல்துறையில் புகார் செய்யப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அப்போது மாலினி தனது குடும்பத்தினருடன் செல்ல விருப்பம் இல்லை என்றும் வைரமுத்துவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இருவருக்கும் பதிவு திருமணம் சில மாதங்களில் செய்து வைப்பதாக வைரமுத்துவின் குடும்பத்தினர் உறுதி அளித்திருந்த நிலையில் நேற்று மாலினி வேலைக்காக சென்னைக்கு கிளம்பி சென்றுள்ளார். தனது வேலை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய வைரமுத்துவை மர்ம நபர்கள் வழிமறித்து அறிவாளால் வெட்டி தாக்கிக் கொன்றனர். பரிதாபமாக உயிரிழந்த வைரமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வைரமுத்துவின் காதலி குடும்பத்தினர் இந்த படுகொலையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஜாதி ரீதியான படுகொலை என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

உயிரிழந்த வைரமுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவராக பணியாற்றியுள்ள நிலையில், சம்பவம் குறித்த கேள்விப்பட்டு அங்கு வந்த ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அறிவழகன், இந்த பிரச்சனையில் காவல்துறையினர் மெத்தனமாக நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் வைரமுத்துவின் தாயார், காதலி மாலினி ஆகியோர் கதறு அழும் காட்சி காண்போர் நெஞ்சை பிழிவதாக உள்ளது.