தேனி மாவட்டம் கம்பம் ஜல்லிக்கட்டு தெருவைச் சேர்ந்தவர் குருநாதன் (வயது 67) இவரது மனைவி மயில்தாய் இவர்களுக்கு ஈஸ்வரன், ,அஜித் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இவர்கள் சின்னமனூர் அருகேயுள்ள ஒத்தப்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்களுடைய மகன் ரித்திஸ் (வயது 7), அபினவ் (5) ஆகியோர் கம்பத்தில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை மயில்தாய் வாரச்சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார்.
வீட்டில் குருநாதன் மற்றும் பேரன்கள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது வீட்டில் குருநாதன் வெடிகுண்டு தயாரித்தபோது அந்த குண்டு எதிர்பாரதவிதமாக வெடித்தது.
இதில் குருநாதன் அபினவ், ரித்திஷ் ஆகியோர் பலத்த காயங்களுட தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து அந்த வீட்டில் இன்ஸபெக்டர் பார்த்திபன், சப்&இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டபோது சிறுத்தையின் நகங்கள் 10 இருந்ததை கண்டறிந்தனர்.
வனவிலங்குகள் வேட்டியாடுவதற்காகவே குருநாதன் வெடிகுண்டு தயார் செய்ததை உறுதி செய்து நகத்தை மட்டும் கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர் .
இது குறித்து கம்பம் மேற்கு வனத்துறை ரேஞ்சர் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று வெடிகுண்டு மோப்பநாய் தேனியில் இருந்து கம்பத்திற்கு வரவழைக்கப்பட்டது.
பின்னர் போலீசார் மற்றும் வனத்துறையினருடன் மோப்பநாய் வீரா மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குருநாதன் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் வெடிமருந்து தயாரிப்பதற்கான மூல பொருட்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதனை பத்திரமாக காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும் நடைபெற்ற சோதனையில் சிறுத்தையின் நகங்கள் 6 இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கம்பம் வடக்கு போலீசார் நகங்கள் அனைத்தையும் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் நாட்டு வெடிகுண்டு தயாரித்து விபத்து ஏற்படுத்தியதாக கம்பம் வடக்கு போலீசார் குருநாதன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோல் கம்பம் மேற்கு வனத்துறை சார்பிலும் குருநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து ரேஞ்சர் ஸ்டாலின் கூறுகையில்,
கைப்பற்ற நகங்கள் மாமிச உண்ணிகள் இனத்தை சார்ந்தவையாகும் காட்டுபூனையும், சிறுத்தையும் ஒரே மாதிரியாக தெரியும் எனவே இது குறித்து உண்மை தன்மையினை அறிய ஆய்விற்கு அனுப்பி விபரங்களை பெற்ற பிறகு தான் உறுதியான தகவல் தெரிவிக்க முடியும் என்றார்.