• Mon. Oct 7th, 2024

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு…ஹோலி விடுமுறைக்குப் பின் விசாரணை

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்வி நிலையத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது.

இதை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணா தீட்ஷித் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்தார். இதன்படி தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.

நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் அத்தியாவசியமான நடைமுறை இல்லை எனவும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் தீர்ப்பளித்த நீதிபதிகள், மாணவிகளின் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, விரைவில் தேர்வுகள் நடைபெறவுள்ளதால் இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். ஏராளமான இஸ்லாமிய பெண்கள் தேர்வு எழுத உள்ளதால் இவ்வழக்கை விரைந்து விசாரிப்பது அவசியம் எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஹோலி விடுமுறைக்கு பின் இவ்வழக்கை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *