
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு நடந்ததாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலை துறையில் ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு நடந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. 2018 ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது, ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் கூறியுள்ளது.
கடந்த 2016-2021 ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து அதிமுக பல்வேறு டெண்டர் முறைகளை செய்து உள்ளதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக தற்போதைய ஆட்சியில் வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. முக்கியமாக பல்வேறு டெண்டர் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. முக்கியமாக அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2018லேயே ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பல்வேறு நெடுஞ்சாலை துறை டெண்டர்களை தனது உறவினர்களுக்கு கொடுத்து ஊழல் செய்தார் என்று புகார் வைக்கப்பட்டது. மொத்தம் 4800 கோடி ரூபாய் அளவிற்கு இதில் முறைகேடு நடந்தாக புகார் வைக்கப்பட்டது. அதன்படி வண்டலூர் – வாலாஜா சாலை 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வைக்கப்பட்டது. இதில் எஸ்பிகே அண்ட் கோ 200 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டதில் முறைகேடு செய்யப்பட்டதாக புகாரில் கூறப்பட்டது.
