• Sun. May 12th, 2024

ராஜபாளையத்தில் தச்சு தொழிலாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம்..!

ByKalamegam Viswanathan

Jul 4, 2023

ராஜபாளையத்தைச் சேர்ந்த மர வேலை செய்யும் தச்சு தொழிலாளர்கள், கூலி உயர்வு கோரி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் தச்சு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு தினக் கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ. 770 நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது உயர்ந்துள்ள கேஸ் விலை, பெட்ரோல் விலை, வீட்டு வாடகை, சொத்து வரி உயர்வு, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலைவாசி காரணமாகவும், அன்றாடம் வேலைக்கு பயன்படுத்தி வரும் பொருட்களின் வாடகை, கூலியாட்களின் அன்றாட செலவு, உபகரணங்கள் தேய்மானம் மற்றும் பிளேடு உள்ளிட்டவை உடைந்து சேதமாகுதல் போன்ற காரணங்களாலும், தங்களுக்கு வழங்கப்படும் கூலி என்பது கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.


செலவு போக நாள் ஒன்றுக்கு ரூ. 500 மட்டுமே கிடைப்பதால் தங்களின் குடும்ப செலவு, குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட அன்றாட தேவைகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாக தச்சு தொழிலாளர்கள் தெரிவித்தனர். எனவே தற்போது வழங்கப்பட்டு வரும் கூலியில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ. 130 உயர்த்தி தினக் கூலியாக ரூ. 900 வழங்க கோரி இன்று ஒரு நாள் தச்சு தொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களின் கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டு, கூலியை உயர்த்தி நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தச்சு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *