• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குடியரசுத்தலைவரின் உத்தரவில் தலையிட முடியாது : உயர்நீதிமன்றம்

Byவிஷா

Dec 5, 2024

தண்டனைக் கைதிகளின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்த குடியரசுத்தலைவரின் உத்தரவில் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கொலை வழக்கு ஒன்றில் கைதான ராதாகிருஷ்ணன் என்பவருக்கு நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ராதாகிருஷ்ணனின் கருணை மனுவை பரிசீலித்த குடியரசுத் தலைவர் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சாகும் வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநரிடம் அளித்த மனுவை பரிசீலிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், ‘‘கருணை மனு மீது ஏற்கெனவே குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துவிட்ட நிலையில் ஆளுநரிடம் அளித்த மனு மீது நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் வேண்டுமென்றால் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுகி பரிகாரம் தேடலாம்’’ என்றார்.
அதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘‘மனுதாரரின் கருணை மனு மீது குடியரசுத்தலைவர் ஏற்கெனவே முடிவெடுத்து உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது’’ என மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.