• Fri. Apr 26th, 2024

2000 ஆண்டுகள் பழமையான மரங்களை அழித்த கலிஃபோர்னியா காட்டுத்தீ

கலிஃபோர்னியாவின் ராட்சத செக்வோயா மரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நிலைக்கக்கூடிய நிரந்தர சின்னங்களில் ஒன்று.


ஆனால், பூமியில் நீண்ட காலம் வாழக்கூடிய உயிரினங்களில் ஒன்றான இந்த மரங்களையும்கூட, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உண்டாகியுள்ள கடுமையான காட்டுத்தீ அச்சுறுத்துகிறது.


ராட்சத செக்வோயா மரங்களைப் பற்றி குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் உள்ளது. அவற்றின் வித்தியாசமான ப்ரொக்கோலி பூ மாதிரியான கிளைகளுக்கும் டைனோசரின் நீண்ட கழுத்துக்கும் பெரிய வேறுபாடு இருக்காது.


மேலும், அவை நாம் எதிர்பார்க்க முடியாத அளவுக்குப் பெரியவை. 30 அல்லது 40 பேர் கைகளைக் கோர்த்துக்கொண்டு சுற்றி நின்றால் மட்டுமே அதன் சுற்றளவை முழுமையாக இணைக்கமுடியும். மிகவும் உயரமான இந்த மரங்கள் சுமார் 90 மீட்டர் (சுமார் 295 அடி) உயரம் கொண்டவை. அதுவொரு 30 மாடி கோபுரத்தைப் போன்றது.


ஜெனரல் ஷெர்மன் என்றழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய மரத்தைப் பார்க்கையில், “அவை உங்களை மிகவும் ஆழமாக உணரவைக்கின்றன,” என்று பெருமூச்சு விட்டார் கிறிஸ்டி பிங்காம்.
“இந்த மரம் இயேசுவுக்கும் முன்பே பிறந்தது என்பதை நீங்கள் இங்கே நிற்கும்போது உணரலாம்.”
கிறிஸ்டி, குரலைத் தாழ்த்திக்கொண்டு, மரியாதை நிமித்தமாக இப்படிச் சொல்வதைப் போல் கூறினார். சியர்ரா நிவாடா மலைகளில் உள்ள செக்வோயா தேசிய பூங்காவில் இந்த அற்புதமான மரங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் அவர் இருக்கிறார்.


செக்வோயா மரங்கள் நீண்ட காலம் வாழ்பவை. ஏனெனில், அவை தம் சூழலுக்கு நேர்த்தியாகத் தகவமைத்துக் கொள்கின்றன, என்று கிறிஸ்டி என்னிடம் கூறினார்.


கலிஃபோர்னியாவில் எப்போதுமே தீ விபத்துகள் ஏற்படுகின்றன. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, செக்வோயா மரங்கள் தீயைத் தாங்கிக்கொள்ளும் பட்டைகளை உருவாக்கியுள்ளன. அந்தப் பட்டை ஒரு மீட்டர் வரை தடிமனாக இருக்கும். அதோடு மரங்களைச் சேதப்படுத்தும் வெப்பம் மிகுந்த நெருப்பைத் தவிர மற்ற அனைத்தையும் தடுக்கிறது.


ஆனால், கலிஃபோர்னியாவின் காட்டுத்தீ மாறிவருகிறது. கிறிஸ்டி என்ன சொல்கிறார் என்பதைக் காட்ட, என்னை காட்டிற்குள் அழைத்துச் சென்றார்.


இலைகளில் வீசும் காற்றின் சத்தமும் அவ்வப்போது காக்கை கரையும் ஓசையும் இலைக் குப்பைகளில் காலடிச் சத்தமும் மட்டுமே கேட்கிறது. அது சொர்க்கம். ஆனால், ஒரு மேடு மீது ஏறும்போது காட்சி உடனே மாறியது.


“இதைத்தான் நான் உங்களுக்குக் காட்ட விரும்பினேன். இதுவொரு பெரிய செக்வோயா தோப்பு,” என்று அவர் கூறினார். நிலப்பரப்பு இப்போது சாம்பல் அல்லது கருப்பு, எரிசாம்பல் என்று ஒரே வண்ணத்தில் இருந்தது. பல பெரிய மரங்கள் கரி தூண்களாக மாறிவிட்டன.


“2015-ம் ஆண்டுக்கு முன்பு யாரும் இதுபோன்ற ஒரு செக்வோயாவை பார்த்ததில்லை,” என்கிறார் கிறிஸ்டி. மிகப்பெரிய மரங்களில் ஒன்றின் கருமையான எச்சங்களை அவர் சுட்டிக்காட்டி, “ஒரு மரம் மெழுகுவர்த்தியாக மாறி இப்படி எரிவதை நீங்கள் பார்த்ததில்லை,” என்று கூறும்போது அழுதுவிட்டார்.


“1000 முதல் 2000 ஆண்டுகள் பழைமையான இந்த மரம் இன்னும் 500 முதல் 800 ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டும். ஆனால், இல்லாமல் போய்விட்டது.”


கிறிஸ்டி தன்னுடைய ஜாக்கெட்டின் கைகளில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “இது இனி காற்றிலிருந்து கரிமத்தை உறிஞ்சாது. அதுவொரு புள்ளி ஆந்தைக்கு இல்லமாக இருக்காது. அது இறந்துவிட்டது,” என்றார்.


கலிஃபோர்னியாவில் மரங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. வடக்கே பல மணிநேர பயணத்தில் நாங்கள் கோல்ட் ரஷ் கால நகரமான கிரீன்வில்லுக்குச் சென்றோம். அதன் வைல்ட் வெஸ்ட் பாணியிலான கிளாப்போர்டு கடைகள் மற்றும் நேர்த்தியான மரத்தால் ஆன கோபுரத்துடன் கூடிய வெள்ளை வர்ணம் பூசப்பட்ட தேவாலயம் பிரபலமானது.


இந்தக் கோடையில் ஏற்பட்ட டிக்ஸி தீ என்று பெயரிடப்பட்ட பெரிய காட்டுத் தீயில் ஒரு மில்லியன் ஏக்கர் எரித்துவிட்டது. இதை அணைக்க சுமார் 600 மில்லியன் டாலர்கள் செலவானது.
நிக்கோயல் ஃபாரிஸ், தனக்கு எப்படி ஊரை விட்டு வெளியேறச் சொல்லி ஒரு குறுஞ்செய்தி வந்தது என்று என்னிடம் கூறினார். ஒரு மணிநேரத்திற்குப் பிறகு, அவருடைய வீடு உட்பட மொத்தமாக 1,500 கட்டடங்கள் தீயில் அழிக்கப்பட்டன.


“இது என் வாழ்க்கையின் அனைத்து நிறங்களையும் எடுத்துவிட்டது. பாருங்கள், எல்லாம் சாம்பல் நிறத்தில் உள்ளது,” என்று நிக்கோயல் தனது வீட்டின் சாம்பலை நோக்கி சைகை காட்டினார். “நாங்கள் திட்டமிட்டு கட்டிய எதிர்காலத்தை இழந்தோம். நாங்கள் எங்கள் கதையை இழந்தோம்,” என்று அழுதுகொண்டே என்னிடம் கூறினார்.


ஆனால், நிக்கோயல் நம்பிக்கையை இழக்கவில்லை. அண்மைக் காலத்திய தீ பாதுகாப்பு குறித்த அறிவைப் பயன்படுத்தி நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புவதைப் பற்றி அவர் பேசினார். அவரும் அவருடைய கணவரும் தங்கள் நிலத்தில் 80% உணவு உற்பத்தியைச் செய்தனர். மற்றவர்களும் அவ்வாறே செய்வார்கள் என்று அவர் நம்புகிறார்.


“கிரீன்வில் உண்மையில் நிலைத்தன்மை மற்றும் காலநிலை தழுவலில் ஒரு கலங்கரை விளக்கம் போன்ற சமூகமாக இருக்கமுடியும். அதோடு நம்முடைய புதிய வாழ்வில் நெருப்பு ஒரு பகுதியாகிவிட்டது. ஏனெனில் பெரிய காட்டுத்தீ ஏற்படுவது இப்போது சாதாரணம்,” என்கிறார்.
மேலும், காட்டிலும், கிறிஸ்டி நம்பிக்கையைக் கைவிடவில்லை. அடுத்த ஆண்டு செக்வோயாக்கள் மீண்டும் இங்கு முளைக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அவை எரிந்த மண்ணில் விரும்பி வளர்கின்றன. மேலும், காடுகளைச் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்றும் நெருப்பை மூட்டக்கூடிய இறந்துபோன மரங்களை அகற்றவேண்டும் என்றும் கூறுகிறார்.


மேலும், ஒரு சில மரங்கள், இங்கே அழிவின் நடுவிலும்கூட உயிர்வாழும். கிறிஸ்டி தோப்பின் விளிம்பில் உள்ள ஒரு ராட்சத செக்வோயாவின் கருகிய பட்டையை விரல்களால் கீறத் தொடங்கினார். சுமார் ஓர் அங்குலம் அல்லது இரண்டு சென்டிமீட்டர்கள்தான், ஆழமாக இல்லை.
நெருப்பால் கருகிய மேற்பட்டை, சிவப்பு நிற பட்டைக்கு வழிவகுக்கிறது. “இது வெறும் மேற்பரப்பு சேதம். மேலே இலைகளைப் பாருங்கள். நிறைய உயிர் பிழைத்திருக்கிறது. இந்த மரம் வாழும்!” என்கிறார் கிறிஸ்டி.


செக்வோயாக்களின் எதிர்ப்புத்திறன் நம்மை ஊக்குவிக்க வேண்டும் என்கிறார். “காலநிலை மாற்றத்தில் நாம் இப்போது செயல்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு சிறிய விஷயமும் முக்கியமானது என்றும் இது நமக்குச் சொல்கிறது,” என்றவாறு திரும்பி என்னைப் பார்த்தார்.
“கரிம உமிழ்வை கட்டுப்படுத்தும் ஒவ்வொரு செயலும் இந்தக் காடுகள் நீடித்திருக்க உதவம்,” என்று கூறினார். நாங்கள் மரங்கள் வழியாக நடக்கும்போது அவருடைய புன்னகை திரும்பியதை நான் கவனித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *