• Tue. Oct 8th, 2024

ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு-பால் முகவர்கள் சங்கம் வேதனை

ByKalamegam Viswanathan

Feb 12, 2023

ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு, மாற்றாந்தாய் மனப்பான்மையில் அரசும், ஆவினும்.!”
-பால் முகவர்கள் சங்கம் வேதனை. இது சம்பந்தமாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி நம்மிடம் கூறியதாவது:
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் ஒன்றியங்களில் (ஆவின்) பணியாற்றும் தகுதியுள்ள பணியாளர்களின் அடிப்படை ஊதியத்தில் 17%லிருந்து 31% ஆக (சுமார் 14% கிட்டத்தட்ட இருமடங்கு) கடந்த 01.01.2022முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை என்பது பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பதும், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டும் கூட தமிழ்நாடு அரசும், ஆவின் நிர்வாகமும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அதனை உயர்த்தி வழங்க முன் வராமல் இருப்பது மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது.
ஆவின் எனும் ஆலமரத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஆணிவேராக விளங்குவது விநியோகம் மற்றும் விற்பனை பிரிவு தான். ஏனெனில் விநியோகம் மற்றும் விற்பனை முறையாக நடைபெற்றால் தான் ஆவினுக்கான வருவாய் சரியாக கிடைக்கும் அப்போது தான் பணியாளர்கள், அதிகாரிகளுக்கான ஊதியம், பால் கொள்முதலுக்கான தொகை மற்றும் இதர செலவினங்களுக்குரிய தொகையை சரிவர பட்டுவாடா செய்ய முடியும். அப்படிப்பட்ட அத்தியாவசியமான அந்த இருதுறைகளிலும் உயிர்நாடியாக திகழ்பவர்கள், ஆண்டின் 365நாட்களும் பொதுமக்களுக்கு தங்குதடையற்ற சேவையை வழங்கி வரும் பால் முகவர்கள் தான்.
ஆனால் ஆவினுடைய வளர்ச்சிக்கு பிரதானமாக விளங்கும் பால் முகவர்களின் வருமானமான விற்பனை கமிஷன் தொகை என்பது பல ஆண்டுகளாக சொற்ப அளவிலேயே (ஆவின் பால் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் இருந்து ஒரு லிட்டருக்கு அதிகபட்சமாக 2.00ரூபாய்) வழங்கப்பட்டு வருவதும், நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து சொற்ப அளவில் வழங்கப்படும் அந்த விற்பனை கமிஷன் தொகையையும் மொத்த விநியோகஸ்தர்கள், பால் முகவர்கள், சில்லறை வணிகர்கள் என மூவர் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பதும், பால் பாக்கெட்டுகள் லீக்கேஜ் ஆவதாலும், பால் மற்றும் பால் பொருட்கள் கெட்டுப் போவதால் ஏற்படும் இழப்புகளையும் பால் முகவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை, அவ்வாறு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யாமல் பால் முகவர்களை அலைகழிப்பது, ஒவ்வொரு ஒன்றியங்களில் ஒவ்வொரு நிலையிலான விற்பனை கமிஷன், அதிலும் கூட சமன்படுத்தப்பட்ட, நிலைபடுத்தப்பட்ட, நிறைகொழுப்பு மற்றும் டீமேட் பால் வகைகளுக்கு என ஒவ்வொரு வகையான விற்பனை கமிஷன் தொகை வழங்குவது என ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகள் பல ஆண்டுகளாக பால் முகவர்களை கசக்கிப்பிழியும் வகையிலேயே அமைந்து மிகுந்த வேதனையளிக்கக் கூடியதாகவே இருக்கிறது.
தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தங்குதடையற்ற பால் விநியோகம் மற்றும் விற்பனையை மேற்கொண்டு வரும் “பால் முகவர்களில் ஆவின் பால் விற்பனையால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம்” என்பது 100% மறுக்க முடியாத உண்மை. அதே சமயம் ஆவினில் உள்ள கறுப்பு ஆடுகளோடு கரம் கோர்த்துக் கொண்டு, இன்றளவும் ஆவினை சுரண்டி கொழுத்து, கோடிகளில் குளித்துக் கொண்டிருப்பது மொத்த விநியோகஸ்தர்கள் தான். அவர்கள் தான் ஆவின் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வாரி வழங்கும் கற்பக விருட்சம், அள்ள, அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரம், ஆனால் உண்மையாய் உழைக்கும் பால் முகவர்கள் தண்ணீருக்குள் அழுகின்ற மீன்களைப் போல நித்தமும் தங்களுக்குள்ளேயே அழுது கொண்டிருப்பதால் அதனை ஆட்சியாளர்களும், ஆவின் நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் பால் முகவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீர் போல தொடர்ந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.
அதனால் தான் பால் முகவர்களுக்கான விற்பனை கமிஷன் தொகையை தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக உயர்த்தி வழங்க வேண்டும், தனியார் பால் நிறுவனங்களைப் போல தமிழகம் முழுவதும் மொத்த விநியோகஸ்தர்கள் இல்லாமல் பால் முகவர்களோடு நேரடி வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக ஆவின் நிர்வாக இயக்குனர்களாக இருந்தவர்களிடமும், தமிழக அரசு மற்றும் பால்வளத்துறை அமைச்சர்களாக இருந்தோரிடமும் எண்ணற்ற முறை கோரிக்கைகளை முன் வைத்தும் கூட இதுவரையிலும் பலன் என்னவோ பூஜ்யமாகவே இருப்பதால் அதுவே ஆவினுடைய விற்பனை வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாகவும் இருந்து வருகிறது.
எனவே ஆவினில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தி வழங்கியுள்ள தமிழ்நாடு அரசு, ஆவினின் வளர்ச்சிக்கும், அதன் பணியாளர்களுக்கு ஊதியம் கிடைக்க காரணமாக இருக்கும் பால் முகவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொண்டு எங்களது சங்கத்தின் நீண்டகால கோரிக்கைகளான தமிழ்நாடு முழுவதும் உள்ள 27ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில் ஒரே நிலைப்பாட்டை முன்னெடுத்து, ஆவினுக்கு இழப்பை ஏற்படுத்தும் மொத்த விநியோகஸ்தர்கள் முறையை ரத்து செய்து, தனியார் பால் நிறுவனங்களைப் போல் பால் முகவர்களுக்கு நேரடியான வர்த்தக தொடர்புகளை கொடுத்து, பால் முகவர்கள் மற்றும் சில்லரை வணிகர்களின் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை குறைந்தபட்சம் லிட்டருக்கு 5.00ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் ஆவண செய்திட வேண்டுமாய் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *