• Fri. May 10th, 2024

விருதுநகரில் தொழிலதிபர் வெட்டிப் படுகொலை..!

ByKalamegam Viswanathan

Jul 26, 2023

விருதுநகரில் அரசு அலுவலகத்துக்குள் புகுந்து தொழிலதிபரும், மருதுசேனை அமைப்பின் மாநில பொருளாளருமான குமரவேல் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருநகர் மாவட்டம், விருதுநகர் மேல ரதவீதி பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் (56). இவர் மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளராகவும், விருதுநகர் நகராட்சியின் மார்க்கெட் வசூல் உள்ளிட்ட ஒப்பந்ததாரராகவும், பல்வேறு தொழில்களும் செய்து வந்தார். விருதுநகர் மீன் மார்க்கெட் அருகேயுள்ள மாம்பழ பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் குமரவேல், அலுவலக கணக்காளர் ரூபி (41), ராம்குமார் (34), ஆகியோர் நேற்று மாலை அலுவலக பணி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று கூச்சலிட்டபடி அலுவலகத்திற்குள் புகுந்தனர். இதனைக் கண்ட குமரவேல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அப்போது அந்தக் கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் குமரவேலை சரமாரியாக வெட்டினர். இதனைத் தடுக்க முயன்ற ரூபி மற்றும் ராம்குமாருக்கும் வெட்டு விழுந்தது. குமரவேலை தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அரிவாள் வெட்டால் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக குமரவேல் உட்பட 3 பேரையும் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குமரவேல் சிகிச்சை பலனலிக்காமல், நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். ரூபி மற்றும் ராம்குமாருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், காரைக்குடியில் நடந்த கொலை சம்பவத்திற்கு பழிக்குபழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று தெரிய வந்தது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தப் படுகொலை சம்பவத்தால் விருதுநகர் தேசபந்து திடல் பகுதி, பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் பதற்றம் இருப்பதால் அந்தப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *