• Mon. Apr 29th, 2024

காஞ்சியில் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்ட விழிப்புணர்வு..!

Byவிஷா

Jun 7, 2023

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எஸ்.சி.,எஸ்.டி.தொழில் முனைவோர்களுக்கான அண்ணல் அம்பேத்கர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..,
“தமிழ்நாடு அரசு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர்களுக்கென சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை தமிழக அரசு இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் சட்ட மன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர் தொடங்கவிருக்கும், உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த நேரடி வேளாண்மை தவிர்த்த தொழில் திட்டங்களுக்கும் வங்கி கடனுதவியோடு மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பதாரர்களுக்கு எந்தவித கல்வித்தகுதியும் தேவையில்லை, வயது வரம்பு 55க்கு மிகாமல் இருக்க வேண்டும். புதிய தொழில் முனைவோராகவும் ஏற்கனவே தொழில் தொடங்கி அதனை விரிவு படுத்த விரும்புவோரும் விண்ணப்பிக்கலாம். அதிக பட்ச மானிய தொகை1.5 கோடியும், மாதாந்திர வட்டி தொகையில் 6 சதவீதத்திற்கு வட்டி மானியமும், மொத்த திட்டத்தொகையில் 65 சதவீத வங்கி கடனாகவும், 35 சதவீத அரசின் மானியமாகவும்வழங்கப்படும். எனவே பயனாளர்கள் தம் பங்காக விளிம்புத் தொகை செலுத்த வேண்டிய தேவை இல்லை.
தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சியினை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.gov.in என்ற இணையத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும் கடன் பெறுவது தொடர்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்பு பாலமாகவும் மாவட்ட தொழில் மையம் விளங்கும்.
இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை (ஜுன் 7ம் தேதி) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.ஆர்வமுள்ள எஸ்.சி., எஸ்,டி., பிரிவு தொழில்முனைவோர் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *