• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!

Byவிஷா

Mar 22, 2023

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் பூங்காவில் பானிபூரி சாப்பிட்டார்.
நேற்று முன்தினம் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லியில் அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கிஷிடா ஆகியோர் தலைமையில் இரு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவினர் சந்தித்துப் பேசினர். அப்போது பாதுகாப்பு, சுகாதாரம், வர்த்தகம், முதலீடு, இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
பின்னர் மாலையில் டெல்லியில் உள்ள புத்தர் ஜெயந்தி பூங்காவுக்கு சென்ற இரு தலைவர்களும் அதன் ரம்மியமான அழகைக் கண்டு களித்தனர். அப்போது மாம்பழ சாறு உள்ளிட்ட இந்திய பானங்கள் மற்றும் பல்வேறு சிற்றுண்டி வகைகளை கிஷிடாவுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். இது தொடர்பான புகைப் படங்களை மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். அதனுடன், “இந்தியாவும் ஜப்பானும் நட்பு நாடுகளாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்று புத்தரின் போதனைகள் ஆகும். எனது நண்பர் கிஷிடாவுடன் புத்தர் ஜெயந்தி பூங்காவை பார்வையிட்டேன்” என பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் தெருவோர கடைகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் பானி பூரி, பிரைடு இட்லி உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளை இரு தலைவர்களும் ரசித்து சாப்பிட்டனர். “எனது நண்பர் கிஷிடா, பானி பூரி உள்ளிட்ட இந்திய சிற்றுண்டியை விரும்பி சாப்பிட்டார்” என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பின்னர் இருவரும் மண் குவளையில் டீ குடித்தபடியே பூங்காவை உலா வந்தனர். அப்போது கிஷிடாவுக்கு போதி மரக்கன்றை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.