சசிகலாவை சந்தித்துப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால்,
ஓ. ராஜா, (தேனி மாவட்ட ஆவின் தலைவர் )
முருகேசன், (தேனி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் )
வைகை. கருப்புஜி, (தேனி மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் )
சேதுபதி, (கூடலூர் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் )
ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர், பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம், இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவேண்டும் என தேனி மாவட்ட அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஏற்பாட்டிற்கு மூலதனமாக இருந்தது தாம் தான் என ஓ.பி.ராஜா ஏற்கனவே தெரிவித்து இருந்தார். மேலும் நடக்கும் நிகழ்வுகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியாமல் நடந்திருக்காது என்று கூறி வந்த நிலையில், தற்போது தம்பியை நீக்குவதற்கு அண்ணனே கையெழுத்து போட்டிருப்பது அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்கும் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
