தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால் ஓடைகளில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் செங்கல் சூளைகளுக்குள் புகுந்தது. இதனால், அங்கு காயவைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான செங்கற்கள் தண்ணீரில் கரைந்து நாசமடைந்துள்ளதால், தொழிலாளர்களும் உரிமையாளர்களும் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, ராஜக்காள்பட்டி மற்றும் சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பத்துக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இந்த மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த பலத்த மழையின் காரணமாக ஓடைகளில் பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளிலும், செங்கல் காளவாசல்களுக்குள்ளும் புகுந்தது. இதனால் விற்பனைக்காகத் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான செங்கற்கள் மழைநீரில் முழுமையாகக் கரைந்து மண்ணோடு மண்ணாகின.

சீசன் காலத்தில் திடீரென பெய்த இந்த மழையால், சூளை உரிமையாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்களும், உழைப்பும் வீணாகிப் போய் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
எதிர்காலத்தில் இது போன்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க, அப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் தண்ணீர் செல்லும் வடிகால் வாய்க்கால்களை உடனடியாக முறையாகத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



