கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி பகுதியில் விசைப்படகு உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 35-லட்சம் ரூபாய் மதிப்பிலான 90-சவரன் தங்க நகைகள் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆன்றணி பாபு கேரளாவில் விசைப்படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளனர் இரவு பத்து மணிக்கு வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பிய அவர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து வீட்டில் அறைகளை சென்று பார்த்தபோது அறையில் இருந்த இரண்டு பீரோ கதவுகளும் திறக்கப்பட்டு பீரோ அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ-35 லட்சம் மதிப்பிலான 90-சவரன் தங்க நகைகளை கொள்ளை போன நிலையில் நகை பெட்டிகள் திறக்கப்பட்டு சிதறிய நிலையில் கிடந்துள்ளது.
கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் விசாரணை நடத்தி 90-சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கொள்ளை நடந்த போது ஆன்றணி பாபு வீட்டருகே நடந்த திருமண நிகழ்ச்சியால் அதிக அளவு ஆள் நடமாட்டம் இருந்த நிலையிலும் அரங்கேறிய கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.