
மணியம்பட்டியில் நடந்த காணை நோய் தடுப்பு சிறப்பு கால்நடை முகாமில், 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு மழை கொட்டி தீர்த்தது. சீதோஷன மாற்றத்தால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக காணை நோய் தாக்கத்தால் பால் உற்பத்தி சரிந்தது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை போடி, கம்பம், சின்னமனுார், கொடுவிலார்பட்டி, நாகலாபுரம் போன்ற பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் காணை நோயால் பாதிக்கப்பட்டு, மருந்து கிடைப்பதில் ஏற்பட்டது. இதனால் கால்நடை வளர்ப்போர் பெரிதும் கவலையடைந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு காணை நோய் தடுப்பதற்கான சிறப்பு முகாம்களை அமைப்பதற்கு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.தேனி, போடி அருகே உள்ள மணியம்பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை முகாம் நடந்தது.
ராசிங்காபுரம் கால்நடை மருத்துவர் பாஸ்கரன் தலைமையில் மருத்துவ குழுவினர் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். தவிர, கால்நடை வளர்ப்போருக்கு நோய்த் தடுப்பு குறித்து அறிவுரை வழங்கினர். கால்நடைகளை முறையாக பராமரித்த உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை மணியம்பட்டி ஊராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணை தலைவர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
