• Thu. Sep 19th, 2024

சூர்யாவின் படத்திற்கு பாமக எதிர்ப்பு!

ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக சூர்யா பொது மன்னிப்பு கேட்காதவரை கடலூர் மாவட்டத்தில் அவர் நடித்த படங்களை திரையிடக் கூடாது என பாமக சார்பில் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி அந்த படம் ரிலீசான சமயத்திலேயே பாமகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஜெய்பீம் படத்தை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ஜெய்பீம் சர்ச்சை மீண்டும் தலைதூக்கி உள்ளது.

பாமக மாணவர் சங்க மாநில செயலாளர் இள.விஜயவர்மன் சார்பாக கடலூர் மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 02ம் தேதியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம். டி.செ.ஞானவேல் இயக்கிய இப்படத்தை 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து நடிகர் சூர்யா நடித்துள்ளார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ள உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம்.

அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்ஐ அந்தோனிசாமி என்ற தலித் கிருத்துவர் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது.

சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்க கூடாது என பாட்டாளி மக்கள் சார்பாகவும், வன்னியர் சங்கம் சார்ப்பாகவும் கேட்டுக் கொள்கின்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *