• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

BySeenu

Dec 26, 2024

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத திமுக அரசை கண்டித்து நாளை முதல் தங்களது வீடுகளின் முன்பு நின்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பேட்டியளித்தார்.

கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக அரசை கண்டித்து நாளை முதல் பாஜகவினர் தங்களது வீட்டின் முன்பு நின்று போராட்டம் நடத்துவார்கள் எனவும், அண்ணா பல்கலை. வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாம் அனைவரும் வெட்கித்தலை குனிய வேண்டிய நிகழ்வு எனவும், இதற்காக நாளை காலை கோவையில் உள்ள தனது இல்லம் முன்பு நின்று ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொள்ள உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, அண்ணா பல்கலை. வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை எப்படி யாரால் வெளியிடப்பட்டது? அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், கைபேசி எண், குடும்ப விவரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளியிடக்கூடாது என கூறப்பட்டிருந்தும் காவல்துறையினர் இது போன்று பெண்களுக்கு எதிரான செயல்களை செய்கின்றனர்.

மேலும் மிகவும் மோசமான வகையில் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்தில் உரிய சிசிடிவி கண்காணிப்பு கூட பொருத்தப்படவில்லை, ஒரு பெண் மட்டுமல்லாமல் பலரையும் அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்திருப்பார் என சந்தேகிக்கப்படுகிறது.

இப்படி குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி திமுகவில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். துணை முதல்வர் உட்பட பல்வேறு அமைச்சர்களோடு அவர் புகைப்படம் எடுத்து நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அவர் மீது உடனடியாக சார்ஜ் சீட் பதிந்து, நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று உரிய தண்டனை வழங்கிட வேண்டும்.

சமூக நீதி, சமத்துவம், பெண்களை முன்னேற்றும் அரசு எனக் கூறிக் கொள்ளும் திமுக அரசு பெண்களுக்கு எந்த விதமான பாதுகாப்பையும் வழங்கவில்லை என்பது தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இவை அனைத்தும் தனி மனிதனாக ஒவ்வொருவரையும் தலை குனிய வைக்கிறது. இச்சம்பவங்களை கண்டித்து நாளை காலை 10 மணி அளவில் கோவையில் உள்ள எனது வீட்டின் முன்பு ஆறுமுறை சாட்டையால் என்னை நானே அடித்துக் கொள்ள போகிறேன். மேலும் அனைத்து பாஜகவினரும் அவரது வீட்டின் முன்பு நின்று பாலியல் சம்பவங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை இப்போதிலிருந்து செருப்பு அணிய மாட்டேன் என உறுதி ஏற்கிறேன். 48 நாட்கள் விரதம் இருந்து முருகனின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்து திமுகவிற்கு எதிரான அரசியலை மிக தீவிரமாக முன்னெடுக்க உள்ளோம்” என தெரிவித்தார்.