மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக போராடிய பாஜவினர் போலீசாரை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி , அரசுக்கு எதிராக கொல்கத்தா நகரில் பாஜக சார்பில் நபன்னா அபியான் என்ற பெயரில் பேரணி நடத்த முடிவானது.
இந்த பேரணியில் பங்கேற்பதற்காக மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் இருந்து பாஜக தொண்டர்கள் கொல்கத்தா நகருக்கு படையெடுத்தனர். பேரணியை தடுப்பதற்காக கொல்கத்தா எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள், அந்த வழியில் தடுப்பு வேலிகளை அமைத்து, வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், ராணிகஞ்ச், போல்பூர் மற்றும் துர்காப்பூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு வெளியே பாஜக தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நேற்று கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனால், தொண்டர்கள் பலரை போலீசார் கைது செய்து, தடுப்பு காவலுக்கு கொண்டு சென்றனர்.
இதனால், கொல்கத்தா நகரின் ஒரு பகுதி போர்க்களம் போன்று காட்சியளித்தது. ஒரு புறம் கற்களை வீசி தாக்குதல் நடத்தியும், கம்புகளை கொண்டு அடித்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. மற்றொரு புறம் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்து தொண்டர்களை கலைந்து செல்ல செய்வதும் நடந்தது.இந்த தாக்குதல் சம்பவத்தில் போலீசாரின் கார் ஒன்று சேதப்படுத்தப்பட்டது. இதில் போலீசார் ஒருவர் பாஜக தொண்டர்களால் சூழப்பட்டு கம்புகள் உள்ளிட்டவற்றால் கடுமையாக தாக்கப்பட்டார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.