• Fri. Apr 26th, 2024

கர்நாடக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோட்டை விட்ட பாஜக

கர்நாடகா மாநில உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

58 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 1,184 இடங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் 498 இடங்களை கைப்பற்றி உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு 437 இடங்களும் ஜேடிஎஸ் கட்சிக்கு 45 இடங்களும் கிடைத்துள்ளன. கர்நாடகாவில் 58 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

58 உள்ளாட்சி அமைப்புகளில் 1,184 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 498 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 42.06% வாக்குகள் கிடைத்துள்ளன. கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.)க்கு 437 வார்டுகள் கிடைத்துள்ளன. பாஜகவுக்கு 36.90% வாக்குகளே கிடைத்திருக்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 45 வார்டுகள் கிடைத்துள்ளன. அக்கட்சிக்கு மொத்தம் 3.8% வாக்குகள் கிடைத்துள்ளன.
66 சிட்டி முனிசிபல் வார்டுகளில் காங்கிரஸ்-61; பாஜக- 67; ஜேடிஎஸ்- 12 இடங்களில் வென்றுள்ளன. 441 டவுன் முனிசிபல் வார்டுகளில் காங்கிரஸ்- 201; பாஜக- 176; ஜேடிஎஸ் 21 இடங்களைப் பெற்றுள்ளன. பட்டன பஞ்சாயத்துகள்: மொத்தம் உள்ள 588 வார்டுகளில் காங்.- 236; பாஜக-194; ஜேடிஎஸ்-12 இடங்களில் வென்றுள்ளன.

கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியை அறுவடை செய்திருப்பது அக்கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே.சிவக்குமார், கர்நாடகாவில் காங்கிரஸ் அலை வீசுகிறது என்பதையே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. 2023-ம் ஆண்டு நடைபெறும் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்று மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை. பணம் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்ற பாஜகவின் அணுகுமுறையை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்றார்.

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா தமது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸுக்கு மிகப் பெரிய வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதையே வெளிப்படுத்தி இருக்கின்றனர். அடுத்த பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக இதனை பார்க்கலாம் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *