• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மக்களை திசைதிருப்பவே தமிழ்புத்தாண்டு தேதி மாற்றம்- பாஜக தலைவர் அண்ணாமலை குற்றசாட்டு

வெள்ள பாதிப்பு விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்பவே தமிழ்புத்தாண்டு தேதியை திமுக அரசு கையில் எடுத்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திமுக அரசு முறையாக செயல்படுத்தாமல் தன்மீது உள்ள தவறை மறைக்க கடந்த அதிமுக அரசு மீது குறை சொல்லக் கூடாது என்றார். உரிய ஆதாரம் இன்றி கடந்த ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமைச்சர்கள் கூறுவதை ஏற்க முடியாது என்ற அண்ணாமலை, தொடர்புடைய அரசு அதிகாரிகள் விசாரணை செய்து தெரிவிக்கவும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றார். தமிழகத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரைடுகள் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை குறைக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் விலையை கொண்டு வந்தால் நிச்சயம் ஒரு லிட்டர் பெட்ரோல் 60 ரூபாய்க்கு கீழ் வரும் என்றார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்யும்போது அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு போடுவதை தவிர்த்தாலே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும் என்ற அவர் அமைச்சர்களின் பாதுகாப்பு பணிக்காக மட்டுமே காவல்துறையை பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்தார். வெள்ள பாதிப்பு விவகாரத்தில் மக்களை திசை திருப்புவதற்காகவே திமுக அரசு தற்போது தமிழ் புத்தாண்டு தேதியை கையில் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.