• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நவம்பரில் பாஜக உட்கட்சி தேர்தல்

Byவிஷா

Oct 22, 2024

நவம்பரில் பாஜக உட்கட்சி தேர்தல் நடைபெறவிருப்பதால், தேர்தல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி டெல்லி பாஜக தேசிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தமிழகத்திலும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணிகளை மாநில, மாவட்ட நிர்வாகிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கிளைகளிலும் 200 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜகவினர் பணியாற்றி வருகின்றனர்.
ஆனாலும், பாஜவினர் எதிர்பார்த்ததுபோல உறுப்பினர் சேர்க்கை இல்லை என பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது. தற்போதுவரை 30 லட்சம் அளவிலேயேஉறுப்பினர்கள் இணைந்திருப்பதாகவும், அதனால், உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி பாஜகமேலிடத்தில், தமிழக நிர்வாகிகள் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பாஜக அமைப்பு தேர்தலை நவம்பர் முதல் வாரம் நடத்துவதற்கான பணிகளை கட்சித் தலைமை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக கிளைத் தலைவர்கள், மண்டலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காகத் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக மாநில துணை தலைவர் சக்கரவர்த்தியும், இணைபொறுப்பாளர்களாக தேசிய பொதுக் குழு உறுப்பினர் செல்வக்குமார், மாநில செயலாளர் மீனாட்சிநித்யாசுந்தர், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளி நரசிங்க பெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லி பாஜக தேசிய அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி நேற்று நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்பில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் 4 பேரும் கலந்து கொண்டுள்ளனர். கட்சி தலைமை வழிகாட்டுதலின் பேரில், தேர்தல் பணிகளை விரைவில் தொடங்க இருப்பதாக பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.