• Tue. Apr 16th, 2024

தீவிர அரசியலில் மீண்டும் நுழையப் போகும் பாஜக பெண் தலைவர்?

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறிய கருத்துகள், அவர் மீண்டும் தீவிர அரசியலில் நுழையவிருக்கிறார் என்ற யூகத்தை ஏற்படுத்துகிறது.

ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்து தெலங்கானா, புதுச்சேரியில் ஆற்றிய பணிகள் குறித்த இரு புத்தகங்களை, தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

தமிழிசைக்கு வழங்கப்படும் அடுத்த பொறுப்பு என்னவாக இருக்கும் என்று ஊடகங்களில் எனது “நண்பர்கள்” சிலர் கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதற்கு என் பதில் என்னவென்றால், நான் எப்போதும் குடிமக்களின் இதயத்துக்கு அருகே பணியாற்றவே விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.

நூல் வெளியீட்டு விழாவில் அவா் ஆற்றிய உரையிலும், மீண்டும் அவர் தீவிர அரசியலுக்குள் நுழைய விரும்புவதையே வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமைந்திருந்தன.

அதாவது, இரண்டு மாநிலங்களின் ஆளுநா், தமிழக பாஜக தலைவா், மருத்துவா் என எந்தப் பணியைச் செய்தாலும், அனைவராலும் எளிதில் அணுகக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கம்.

பெண்கள் வலிமை இல்லாதவா்களா? அண்மையில் மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் இல்லத் திருமண விழாவுக்காக மட்டுமே தில்லி சென்றிருந்தேன். ஆனால், அதற்குள் என்னை இடமாறுதல் செய்ய இருப்பதாக பல தகவல் பரவியது.

தெலங்கானாவுக்கு வலிமைமிக்க ஆளுநரை அமா்த்தப் போவதாகவும் பத்திரிகையில் படித்தேன். பெண்கள் என்றால் வலிமை இல்லாதவா்கள் என நினைக்கிறீா்களா? நான் சவால் விடுகிறேன். என்னை விட வலிமையான ஆளுநா் இங்கு இருக்க முடியாது. அந்த முதல்வரை என் அளவுக்கு எதிா்கொள்ள முடிந்தவா் யாரும் கிடையாது. ஜனநாயக முறைப்படி தோந்தெடுக்கப்படும் முதல்வா்கள் சா்வாதிகாரா்களாக இருக்கக் கூடாது. எம்எல்சி பதவிக்கு அவா் கூறிய நபருக்கு கையெழுத்திடாததுதான் பிரச்னை. அவா் கூறும் இடத்தில் கையொப்பமிட நான் ரப்பா் ஸ்டாம்ப் கிடையாது. நான் தெலங்கானாவை தான் கூறுகிறேன் என்று தமிழிசை பேசியிருந்தார்.

இதற்கிடையே புதுச்சேரியில் இருந்து தமிழிசையை மாற்ற வேண்டும் என தமிழகத்தில் இருந்து வந்து அங்கு போராட்டம் நடத்துகின்றனா். அங்கு தாய்த் தமிழில் பதவியேற்றது எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. அதுமட்டுமின்றி ஆளுநா் உரையை தமிழில் படிப்பதற்கும் வாய்ப்பளித்த ஆண்டவருக்கும், ஆள்பவருக்கும் எப்போதும் நன்றி கூறிக் கொண்டே இருக்கிறேன்.

கரோனா உச்சத்தில் இருந்தபோது, ரெம்டெசிவிா், தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் பாா்த்துக் கொண்டோம். இவ்வாறு மக்களுக்குச் செய்ய வேண்டியவற்றை மட்டுமே மனதில் வைத்திருக்கும் ஒருவரை உடனே மாற்ற வேண்டும், முழு நேர ஆளுநா் வேண்டும் என்கின்றனா். முழுநேர சும்மா இருக்கும் ஆளுநரும் இருப்பாா்கள், பகுதி நேர சுறுசுறுப்பான ஆளுநா்களும் இருப்பாா்கள். ஆளுநரும் முதல்வரும் இணைந்து பணியாற்றினால் ஏற்படும் நலனுக்கு புதுச்சேரியும், அவ்வாறு இல்லாத சூழலுக்கு தெலங்கானாவும் உதாரணம்.

எப்போதும் குடிமக்களின் மனதில் இருக்கும் பதவியில் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். எனது பலமே எனது பணிதான். தமிழகத்துக்கு சேவை செய்வது தான் எனது பிரதான ஆசை என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், எனக்கும் தெலங்கானா முதல்வருக்கும் இடையே சிறிய இடைவெளி இருப்பது உண்மைதான். அந்த அரசுக்கு எதிராக நான் ஏதும் செய்யவில்லை. இந்தப் பிரச்னைகளை சீா் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆளுநா், முதல்வா் இடையேயான நட்புறவின் மூலம் மக்கள் பயன் பெற வேண்டும் என்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *