• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கேரள அரசை கண்டித்து பா.ஜ.க.
போராட்டம்: அண்ணாமலை

கேரள கம்யூனிஸ்டு அரசு வயநாடு, காசர்கோடு, ஊட்டி, நாகர்கோவில், தென்காசி, பொள்ளாச்சி, கொடைக்கானல், குமுளி உள்ளிட்ட 13 முக்கிய எல்லைகளில் டிஜிட்டல் முறையில் நிலஅளவை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணி முடிந்ததும் கேரள எல்லையையொட்டி உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலத்தின் அதிகாரப்பூர்வ பதிவு கேரள எல்லைக்குள் சென்றுவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த நிலஅளவை பணியை தமிழக வருவாய்த்துறை செயலாளர் மறுத்துள்ள நிலையில் எல்லைப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் நிலஅளவை நடப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும், கேரள அரசு தங்கள் எல்லைப் பலகைகளை மாற்றி அமைப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆனைக்கல், தேனி மாவட்டம் பாப்பம்பாறை பகுதியில் கேரள அரசு, தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் சுமார் 80 ஏக்கர் பரப்பளவு நிலத்தை தங்களுக்குச் சொந்தமானது என கையகப்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கேரள அரசின் இந்த அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. தேனி எல்லையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மங்களதேவி கண்ணகி கோவில் நிர்வாகத்தின் தமிழக உரிமைகளில் கேரள அரசு ஏற்கனவே தலையிடுகிறது. இதை தமிழக அரசு இதுவரை தடுக்கவில்லை. கேரள அரசின் அத்துமீறல்களை தமிழக அரசு கண்மூடிக்கொண்டு அனுமதிக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தின் நலன்களையும், தமிழக விவசாயிகளின் நலன்களையும் பாதுகாக்க விரைவில் கேரள- தமிழக எல்லைப்பகுதியில் நேரில் ஆய்வு செய்வேன். தமிழகத்தின் ஒரு சதுர அங்குல மண்ணைக்கூட கேரள அரசு கொண்டு செல்ல தமிழக பா.ஜ.க. அனுமதிக்காது. இதுகுறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழக எல்லையை மீட்க தமிழக பா.ஜ.க. மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தயாராக இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.