• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் செப்பனிடும் பணி..,

தண்ணீர் இல்லாமல் வறண்டுகிடக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் ரூ.41 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கன்னியாகுமரி வடக்குரத வீதியில் அமைந்து உள்ளது.

1.5 ஏக்கர் பரப்பில் 25 அடி ஆழத்தில் அமைந்துஉள்ள இந்த தெப்பக்குளம் மன்னர் காலத்தில் பேச்சிப்பாறை அணை திறக்கும் போது முதலில் நிரப்பப்படும் மரபு கொண்டது. ஆனால் தற்போது கால்வாய் ஆக்கிரமிப்பு, பராமரிப்பு பற்றாக்குறை, மற்றும் கசிவு காரணங்களால் தண்ணீர் தேங்கி நிற்காமல் கடலுக்குச் செல்கிறது.

இதன் விளைவாக, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகள் உப்பு நீராக மாறி வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் தெப்பத்திருவிழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வருகிற ஜூன் 9-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளதால் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித் துறை இந்து சமய அறநிலையத் துறை இணைந்து முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்தநிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக் குளத்தை சீரமைத்து தண்ணீர் நிரப்ப ரூ.41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துஉள்ளது. அதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணியின் தொடக்க விழா இன்று நடந்தது. இதில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத் தலைவர்ஜெனஸ் மைக்கேல், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், குமரி மாவட்ட திருக்கோவில்களின் மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர் , கவுன்சிலர்கள் ஆனிரோஸ் தாமஸ், இக்பால், முன்னாள் கவுன்சிலர் தாமஸ், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், ஆனந்த் ,கெய்சர்கான், ஆர்.டி.ராஜா, வேலு, ரூபின், நாகராஜன்,நிசார்,புஷ்பராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.