• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஓஆர்எஸ் பானம் கவனம் : சுகதாரத்துறை எச்சரிக்கை

Byவிஷா

May 1, 2025

சந்தைகளில் விற்கப்படும் ஓஆர்எஸ் பானம் வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும் என பொதுசுகாதாரத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடலில் இருந்து நீர்ச்சத்து, அத்தியாவசிய உப்புகள் கணிசமாக வெளியேறிவிடும். அதற்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டால், கடுமையான நீரிழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படலாம். உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள உப்பு – சர்க்கரை கரைசலை (ஓஆர்எஸ்) பயன்படுத்துவதால், வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பை தவிர்க்க முடியும்.
ஒரு ஓஆர்எஸ் பொட்டலத்தின் 20.5 கிராம் மொத்த எடையில் 13.5 கிராம் குளுக்கோஸ், 2.9 கிராம் டிரைசோடியம் சிட்ரேட், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு ஆகியவை உள்ளன. ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, ஆறிய பிறகு, ஓஆர்எஸ் பொடியை அந்த நீரில் கரைத்து குடிக்க வேண்டும். ஆனால், 24 மணி நேரத்துக்குள் இதை பயன்படுத்த வேண்டும்.
இந்த நிலையில், திரவ உப்பு – சர்க்கரை கரைசல் என்று சந்தையில் வணிக ரீதியில் பல்வேறு பெயர்களில் ஓஆர்எஸ் விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக, நீர்ச்சத்து பானங்கள் என்று விளம்பரப்படுத்தப்படும் பானங்கள் ஆற்றல் மேம்படுத்தக்கூடிய திரவங்களாக மட்டுமே பயன்படுகிறது. இவற்றில், உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய அளவில் தாது உப்புகள், குளுக்கோஸ் ஆகியவை இல்லை. இந்த விதமான பானங்களை பருகுவதால் மருத்துவ ரீதியாக வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பை சரிசெய்ய முடியாது. மாறாக, இவை வயிற்றுப்போக்கை அதிகரிப்பதுடன், நீரிழப்பை அதிகரிக்கவும் செய்யும்.
உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த உப்பு – சர்க்கரை கரைசல் பொட்டலங்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன. தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஓஆர்எஸ் பயன்படுத்தும்போது, அதன் உட்பொருட்கள் உலக சுகாதார நிறுவன தரநிலைக்குள் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் தரமான ஓஆர்எஸ் பொட்டலங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு ‘104’ மருத்துவ சேவையை தொடர்பு கொள்ளலாம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் கேட்டும் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.