சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பபாசி வலியுறுத்தியுள்ளது.
சென்னை புத்தகக் காட்சியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இந்த விழாவில், தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிக்கப்பட்டு, புதுச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் இந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சீமான் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில். சீமானின் பேச்சுக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பபாசி பொதுச்செயலாளர் முருகன், தலைவர் சேது சொக்கலிங்கம் ஆகியோர் கூறுகையில்,, “ புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த சீமான், புத்தகம் பற்றி மட்டுமே பேசியிருக்க வேண்டும். புத்தக காட்சி பாதைக்கு நாங்கள் யார் பெயரை வேண்டுமானாலும் வைப்போம். இந்த விவகாரத்தில் சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகமும் உரிய மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த பதிப்பகம் திட்டமிட்டு இதனை நடத்தியுள்ளது. சீமான் மேடை ஏறுவதற்கு முன்பே, இது அரசியல் மேடை அல்ல, இலக்கிய மேடை, புத்தகங்கள் தொடர்பாக மட்டும் பேசுமாறு அறிவுறுத்தப்பட்டது. சீமானின் பேச்சுக்கு பபாசி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது” என்றனர்.