• Sat. Apr 27th, 2024

திருச்சியில் ட்ரோன்கள் பறக்கத் தடை..!

Byவிஷா

Dec 30, 2023

திருச்சியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலைய முனையம் திறக்க பிரதமர் நரேந்திர மோடி வருவதை முன்னிட்டு, டிச.29 முதல் ஜன.2ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக டெல்லியிலிருந்து தனி விமானத்தில் ஜனவரி 2ம் தேதி புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, அன்று காலை 10 மணியளவில் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் புதிய முனையத்தைத் தொடங்கி வைத்துப் பார்வையிடுகிறார். பின்னர், பகல் 1.15 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு லட்சத்தீவுக்கு செல்கிறார்.
திருச்சிக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்ட வி.வி.ஐ.பிக்கள் வருவதால் திருச்சியில் ‘ட்ரோன்கள்’ பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்..,
‘பிரதமர், முதல்வர் வருகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வாகனங்கள் பறக்க டிசம்பர் 29 முதல் ஜனவரி 2ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *