திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக கருதப்படும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கார்த்திகை தீப திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கோயில் பின் புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் வைபவம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.இதில், குறைவான பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக மலையேறி சென்று மகா தீபத்தை தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மலை மீது ஏற கோயில் ஊழியர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. அண்ணாமலையார் கோயில் உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், விஐபி.க்கள் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இன்று மதியம் ஒரு மணி முதல் 20ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு செல்லக் கூடிய ஒன்பது பிரதான சாலைகளிலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து, பக்தர்களை திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.