மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, குற்றால அருவிகளில் குளிப்பதற்கு 3வது நாளாக தடை விதிக்ப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் இன்று மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு நீடித்தது. அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்தது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மட்டுமின்றி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையுடன் குளிர்ந்த தென்றல் காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 68.40 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணையில் 54.80 மி.மீ., அடவிநயினார் அணையில் 36 மி.மீ., தென்காசியில் 33 மி.மீ., கருப்பாநதி அணையில் 15 மி.மீ., கடனாநதி அணை மற்றும் சிவகிரியில் தலா 11 மி.மீ., ராமநதி அணை மற்றும் ஆய்க்குடியில் தலா 8 மி.மீ. மழை பதிவானது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 36.10 அடி உயரம் உள்ள சிறிய அணையான குண்டாறு அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் 110 கனஅடி நீர் அப்படியே உபரியாக வெளியேறுகிறது. கடனாநதி அணை நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 53.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 72 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 32.84 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 80 அடியாகவும் உள்ளது.
மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் இன்று மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால் இந்த அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த மக்கள் நீர்வரத்தை ரசித்துச் சென்றனர். அதேசமயம், புலியருவி, சிற்றருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துச் சென்றனர்.