• Fri. Apr 19th, 2024

பாதாள அறைக்குள் பல கோடி ரூபாய்கள் பலே கில்லாடி வியாபாரி

ஐந்து நாள்கள் தொடர் ரெய்டு, நீண்ட விசாரணைக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்து வாசனை திரவிய வியாபாரி பியூஷ் ஜெயின் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரபூர்வமாக அறிவித்தது.உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் என்பவர், ஓடோகெம் என்கிற வாசனைதிரவிய நிறுவனத்தை நடத்திவருகிறார். இவரின் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற சிலரும் இதில் பங்குதாரர்களாக இருந்துவருகின்றனர்.


ஜிஎஸ்டி துறையின் புலனாய்வுப் பிரிவு இயக்ககம் ஐந்து நாள்களுக்கு முன்னர், கான்பூரில் உள்ள பியூசின் தொழிற்சாலையில் தேடுதல்சோதனையில் ஈடுபட்டது. சோதனையிடச் சென்றவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும்படியாக அங்கே கட்டுக்கட்டாக பணம் வைக்கப்பட்டிருந்தது.உஷாரான ஜிஎஸ்டி புலனாய்வுத் துறையினர் பியூசுக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனையைத் தொடங்கினர். ஒரு நாள், இரண்டு நாள் என சோதனை நின்றபாடாக இல்லை.

நாட்டிலேயே இதுவரை இல்லாதபடியாக, 23 கிலோ தங்கம், 600 கிலோ சந்தன எண்ணெய், இன்னும் அளவிடப்படாத ஏராளமான அளவு வாசனைதிரவிய மூலப்பொருள்கள் ஆகியன பாதாள அறைகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததை புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையில், ரொக்கப் பணம் மட்டும் மொத்தம் 257 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளின் ஆவணங்களும் சிக்கியுள்ளன. இதில் இரண்டு சொத்துகள் துபாயில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கான்பூரில் ஏழு சொத்துகளும் மும்பையில் இரண்டு சொத்துகளும் டெல்லியில் ஒரு சொத்தும் ஆவணங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவை எதற்கும் பியூஷ் ஜெயின் முறையான வரி எதுவும் கட்டியிருக்கவில்லை எனத் தெரிகிறது.கன்னோஜில் உள்ள பியூஷ் ஜெயினின் பரம்பரை வீட்டில் பாதாள அறைகளில் 16 லாக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றைத் திறப்பதற்கு 500 சாவிகள் இருந்திருக்கின்றன.


கான்பூரில் வாசனை திரவிய தொழிலுக்கென பிரபலமான இத்தர்வலி காலி பகுதியில் பியூஷ் ஜெயின் தொழில்செய்து வருகிறார். கன்னோஜ், கான்பூர், மும்பை ஆகிய இடங்களில் கிளைகளை வைத்துள்ளார். கான்பூரில் நடத்தப்பட்ட சோதனையில் 40 நிறுவனங்கள் மூலமாக பியூஷ் தொழில்செய்துவந்தது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இவ்வளவு வரி ஏய்ப்பையும் தொடர்ச்சியாக செய்துவந்த ஒருவரை இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் போனது எப்படி என சர்வசாதாரணமாகக் கேள்வி எழும். அதற்கான ஒரே பதில், பியூஷ் ஜெயினின் எளிமை தந்திரம்தான்.


ஆமாம், பிடிபட்டதை பல நூறு கோடி ரூபாயாக இருந்தால், உண்மையில் எவ்வளவு சொத்துகளை எங்கெங்கோ வைத்திருக்கமுடியும் என யோசிக்கமுடியுமா, என்ன?


ஆனாலும் மனிதர் அதை ’சாதித்து’க் காட்டியிருக்கிறாரே..! அது என்னதான் தந்திரம்..?அதெல்லாம் அதிகமில்லை, ரொம்பவும் சிறியதுதான் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார், பியூஷ் ஜெயின்.கட்டுக்கட்டான பணமும் பாலம் பாலமான தங்கக் கட்டிகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வளாகத்துக்கு, ஓராண்டுக்கு மேல் யாரையும் காவலாளியாக வைத்திருக்கமாட்டாராம், பியூஷ் ஜெயின். ஒரே சமயத்தில் 2 பேருக்கும் மேல் காவலாளிகளாக இருந்ததுமில்லை. அவர்களுக்கு சம்பளம்தான் கணிசமாக இருக்குமா என்றால் அதுவுமில்லை. மாதத்துக்கு 7,500 ரூபாய்தான் தந்திருக்கிறார்.


இன்னொரு முக்கியமான அம்சம், காவலாளி வீட்டுக்குள் போகவே அனுமதி இல்லை.
சிக்கிய பணமே சில நூறு கோடிகள் இருக்க, சொகுசு கார்கள் எதையும் காணோமே என்று பார்த்தால், அதுவும் இன்னொரு தந்திரமாக இருந்திருக்கிறது, பியூஷ் ஜெயினுக்கு!
ஒரு டொயோட்டா காரும் ஒரு போக்ஸ்வாகன் காரும் மட்டுமே பியூஷின் குடும்பத்துக்கு இருந்திருக்கிறது. அதுவும் அந்த டொயோட்டா காரை தன் 15 வயது மகன் பிரத்யூசின் பெயரில் பதிவுசெய்து வைத்திருக்கிறார், பியூஷ் ஜெயின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *