• Fri. Jun 9th, 2023

மன்னிக்க முடியாதவர் பாக்யராஜ்! – R.K.செல்வமணி ஆவேசம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் வருகிற பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. புது வசந்தம் அணியின் தலைவராக ஆர்.கே.செல்வமணியும், இமயம் அணியின் தலைவராக கே.பாக்யராஜும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியபின் இரண்டு அணி தரப்பிலும் பரஸ்பர குற்றசாட்டுகளை கூறி வாட்சப், ஆடியோ என பகிரப்பட்டு வருகிறது

இந்நிலையில் ஆர்.கே.செல்வமணி பற்றி பாக்யராஜ் பல புகார்களை அடுக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன் கடந்த 20.02.2022 அன்று நடைபெற்ற தனது அணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் செல்வமணியை போர்ஜரி என்கிற அளவுக்கு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஊரில் இல்லாத ஆர்.கே.செல்வமணி.. சென்னை வந்ததும் முதல் வேளையாக பாக்யராஜ் குற்றாச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்..

அதில்.. அவர் கூறியிருப்பதாவது..
”சமீபத்திய பத்து நாட்கள் என் வாழ்க்கையில மிக துயரமான நாட்கள். அதில் சில நாட்கள் என் உடல்நிலை சரியில்லை. இதற்கிடையே என்னோட பெரியப்பாவின் மகள் மிகப்பெரிய தீவிபத்தில் சிக்கி, உடலின் பெரும்பகுதி தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுச்சு. என் மீது ரொம்பவே பாசமுள்ள பெரியப்பாவின் பொண்ணு. உயிருக்குப் போராட்டிட்டு இருந்த அவளை நேராக்கூட பார்க்கமுடியவில்லை
இது எல்லாவற்றையும் விட, இங்கே நண்பர்கள் ஏற்படுத்தியிருக்கும் வேதனை.. பாக்யராஜ் சார் சில வாரங்களுக்கு முன்னாடி ஒரு வீடியோ ஒண்ணு வெளியிட்டிருக்கார். ‘நான் ஏதோ அவருக்குத் தூது அனுப்பினதாகவும், கமிஷனர் ஆபீஸுக்கு போகாதீங்க. இங்கேயே காம்பர்மைஸ் பண்ணிக்கலாம்’னு கெஞ்சினதாகவும் மிக அபான்டமான அவதூறான விஷயங்களை சொல்லியிருந்தார்.

உடனே ஏ.எல்.விஜய்யைக் கூப்பிட்டுப் பேசினேன். ஏன்னா, இந்த சம்பவம் நடக்கறதுக்கு ரெண்டு,மூணு நாள் முன்னாடி ‘நான் உங்களைப் பார்க்கணும்’னு சொன்னார். அப்ப அவரோட எழில், வெங்கட்பிரபுனு மூணு பேரும் எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. இவங்க என் நெருங்கிய நண்பர்கள்னால வீட்டுக்கு வர்றவங்களை மறுக்க என்னால முடியாது. ‘இயக்குநர் சங்கம் பிளவு படக்கூடாது. ஒரே அணியா இருந்து செயல்படணும். எதிரெதிர் அணியா இருந்து பிளவு படக்கூடாது’னு சொன்னாங்க.

அப்ப அவங்ககிட்ட ‘கடந்த டிசம்பர்ல நடந்த பொதுக்குழுவில் பாக்யராஜ் அணியில் இருந்தவங்க எனக்கெதிரா கலகம் பண்ண நினைச்சு, தோல்வியடைஞ்சாங்க. எனக்கு பின்னாடி நின்னுட்டு என்னை அழிக்கணும்னு நினைக்கறாங்க அவங்க நோக்கம் பாக்யராஜ் சாரை ஜெயிக்க வைக்கணும்னு இல்ல. என்னை தோற்கடிக்க வைக்கணும் என்பதுதான் அவங்க நோக்கம். இதுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ பாக்யராஜ் பலியாகிட்டார்னு சொன்னேன். உடனே விஜய், எழில், வெங்கட்பிரபு மூவரும்.. ‘நாங்க பாக்யராஜ் சார் ஒப்புதலோடுதான் இங்க வந்திருக்கோம்னாங்க. எனக்கு பதவி பெரிய விஷயம் இல்லைனு அவங்ககிட்ட சொன்னேன். பாரதிராஜா சார் ஏற்கெனவே பேசினதால அவர் ஆபீஸ்ல வச்சு பேசிக்குவோம்னு சொன்னாங்க. மறுநாள் அங்கே போனேன். ஏ.எல்.விஜய்யும், வெங்கட்பிரபுவும் வந்தாங்க. ஆனா, அங்கே பாரதிராஜா சார் வரவே இல்ல. ‘வந்திருவார் வந்திருவார்னு இவங்க தர்மசங்கத்தோடு சொன்னாங்க.

முக்கால்மணி நேரத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய் சார் அவர் போன்ல பாக்யராஜ் சார் இருக்கார்.. பேசுங்கனு எங்கிட்ட போனை கொடுத்தார்.தப்பா நினைச்சிக்காதீங்க செல்வமணி. இங்கே நாலஞ்சு பேர் கன்வீன்ஸ் ஆகல. அவங்கள கன்வீன்ஸ் பண்ணிட்டு வர்றேன்னு சொன்னார். இதுவரைக்கும் பாக்யராஜ் சார்கிட்ட இருந்து எந்த பதிலும் வரல. ஆனா வீடியோவில அவர் அவரை நான் ஏமாத்தினது மாதிரி, காம்பர்மைஸ் பண்ணிக்கலாம்னு கெஞ்சினதாகவும் எதோ ஒரு பொய்யை சொல்லியிருக்கார். இதே குற்றச்சாட்டை தேர்தல் ஆபீஸ்ல ஒரு புகாரா கொடுத்திருந்தார். அவரோட கம்ப்ளைன்ட் கடிதத்துக்கு நான் விரிவா விளக்கமும் எழுதி அனுப்பியிருக்கேன். அங்கே நடந்த விஷயத்தை எனக்கு கடிதமா கொடுங்கனு எழில், விஜய், வெங்கட்பிரபு மூணு பேர்கிட்டேயும் கேட்டேன். அவங்களும் சேர்ந்து தேர்தல் அதிகாரிக்கு எழுதி கொடுத்திருக்காங்க. பாக்யராஜ் அவர்கள் சொன்னது தவறு. பிழையானது அவர் சொன்னது போல் எதுவும் நடக்கல.நான் என் வாழ்க்கையில மிக மிக நேர்மையானவன். என்னோட மிகப்பெரிய சொத்தே நேர்மையும்,
சுயஒழுக்கமும்தான். நான் பேசாத ஒரு விஷயத்தை பேசினதாகச் சொல்லி அதை நம்ப வைக்கும் முயற்சியில் பாக்யராஜ் ஈடுபடுறார். கொஞ்சம் பேர் என்னை அநாகரிகமா, அபாண்டமா விமர்சனம் பண்ணனும்னு நினைக்கறாங்க. இவர் அதை நாகரிகமாசொல்லியிருக்கார்.

பாக்யராஜ் சார் உங்ககிட்ட ஒண்ணு சொல்றேன். இது தேர்தல் தயவு செய்து உண்மையைப் பேசி ஜெயிக்க முயற்சி பண்ணுங்கனு சொல்லிக்கறேன். நான் இந்த பதவியை அவர்கிட்ட ஒப்படைச்சா நீங்க தொழிலாளர் துறைக்கோ, கமிஷனர் ஆபிஸுக்கோ போக மாட்டேன்னு சொல்றீங்க. உங்களுக்கு பதவி முக்கியம். அப்படித்தானே தவறு நடந்ததா என்பது முக்கியமல்ல.. போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு போகாம இருக்க நான் இந்த பதவியை உங்களுக்கு ஒப்படைக்கணும். இந்த பதவி என் முப்பாட்டன் சொத்தோ.. என் பாட்டன் சொத்தோ அல்ல. இது ஒவ்வொரு உறுப்பினருக்கும் உண்டான உரிமையான ஒரு சொத்து. ஒவ்வொரு உறுப்பினரும் தீர்மானிக்க வேண்டிய விஷயம் இது. நான் எப்படி இதை தீர்மானிக்க முடியும்.? ஒப்படைக்கறது? அப்படி ஒப்படைச்சா நீங்க கமிஷனர் ஆபீஸ் போகமாட்டீங்கன்னா.. இதான் உங்க கேரக்டரா? நான் ரொம்ப பொறுமையா சொல்றேன். உங்க மேல மரியாதை இருக்கு. 25 வருஷமா நான் இந்த சங்கத்துக்காக என் வாழ்க்கையை ஒப்படைச்சிருக்கேன். நீங்க ஒரு சிறு துரும்பக்கூட அசைக்காமல் இன்னிக்கு நீங்க குற்றசாட்டு சொல்றீங்க. இதை நான் ஒத்துக்க முடியாது. இதுபோல தவறான குற்றச்சாட்டு சொன்னீங்கன்னா.. உங்களை ஒரு போதும் மன்னிக்கமுடியாது. ஒரு போதும் பொறுத்துக்கொள்ளவும் முடியாது.” என கூறியிருக்கிறார் ஆர்.கே.செல்வமணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *