• Mon. Apr 28th, 2025

200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை..,

ByVasanth Siddharthan

Apr 12, 2025

திண்டுக்கல்லில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் திண்டுக்கல் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் வழங்கினார்.

திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் திண்டுக்கல் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் நகர்ப்புறம் விஜய ராணி, கிராமப்புறம் முத்துலட்சுமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் அவர்கள் கலந்துகொண்டு, திண்டுக்கல் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் வட்டாரம் பகுதிகளைச் சேர்ந்த 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது :-

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் நடைபெறும் வளைகாப்பு விழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது நமது குடும்ப பிள்ளைகள் பங்கேற்றுள்ள சிறப்பான நிகழ்ச்சியாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். கர்ப்பிணி தாய்மார்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், ஊட்டத்தை தரக்கூடிய அளவிலும் இவ்விழா நடைபெறுகிறது.மேலும் கர்ப்பிணித்தாய்மார்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். கார்ப்பிணி தாய்மார்கள் அனைவரும் நல்ல முறையில் குழந்தைகளை பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். இந்த உயிரோட்டமான அர்ப்புதமான நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என பேசினார்.

மேலும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு தட்டு, சேலை, பேரிச்சம்பழம், கடலைமிட்டாய், வளையல், குங்குமம், வாழைப்பழம், குழந்தை ஆரோக்கிய பூரிப்பு கையேடு உள்ளிட்ட பல பொருட்களை ஐ.பி.செந்தில்குமார் வழங்கினார். பின்னர் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஐந்து வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், கர்ப்பிணித்தாய்மார்கள், பெரியோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.