சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறு. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் பேருந்து நிலையத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தெரு நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனையடுத்து பெண்களை போற்றும் விதமாக கல்லூரி மாணவிகள் நடமானடினர். அதனை தொடர்ந்து கல்லூரி மாணவிகள் பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியை கல்லூரி துணை வேந்தர் வைதேகி விஜயகுமார், கோட்டாட்சியர் முருகேசன், ஆணையாளர் நாரயணன் இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணி பேருந்து நிலையத்தில் துவங்கி அண்ணாசாலை வழியாக மூஞ்சிக்கல் பகுதி வரை நடைபெற்றது.
இந்த பேரணியில் செல்லும் வழியில் மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோலாட்டம் மற்றும் தப்பாட்டம் மூலம் எடுத்துரைத்தும், பெண்களுக்கு கல்வி வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.