• Fri. Apr 19th, 2024

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணி திருவிழா..

Byகாயத்ரி

Aug 26, 2022

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா முன்னிட்டு திருதேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடை பெற்றாலும் ஆவணி திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.ஆவணித்திருவிழா நடைபெறும் 12 நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் காலை ,மாலை இரு நேரங்களிலும் விதவிதமான வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறனர்.

ஆவணி ஏழாம் திருநாளில் சுவாமி சண்முகர் பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் இருந்து சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். ஆவணி திருவிழாவான எட்டாம் திருநாளான அன்று சுவாமி சண்முகர் தையல் நாயகி வகையறா மண்டகப் படியில் இருந்து கிளம்பி வெண் பட்டுடுத்தி வெள்ளை மலர்கள் சூடி வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மாவின் அம்சமாக 8 வீதிகளிலும் வெள்ளி சப்பரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்அதனை அடுத்து சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை பட்டுடுத்தி , பச்சை வண்ண மலர்கள் கொண்ட அலங்காரம் செய்யப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் திருமாலின் அம்சமாக எட்டு ரத வீதிகளையு சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனமும் செய்தனர் .

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. முதலில் விநாயகர் தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து ரதாவீதிகளை சுற்றி வந்தடைந்தது பிறகு சுவாமி குமரவிடங்க பெருமான் அம்பாளுடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருத்தேர் ரதவீதிகள் சுற்றி வலம் வந்தது. அடுத்து அம்பாள் தேர் எழுந்தருளி ரத வீதிகள் சுற்றி வலம் வந்தது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் அரோகரா கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர் இந்த ஆவணி திருவிழா முன்னிட்டு திருச்செந்தூர் முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *