• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மெட்ரோ திட்டத்தில் தானியங்கி ரயில் இயக்கம்

Byவிஷா

Oct 24, 2024

சென்னையின் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் தானியங்கி மெட்ரோ ரயிலை இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், 2வது மற்றும் 3வது கட்ட மெட்ரோ விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், இரண்டாம் கட்ட மெட்ரோ வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை இயக்க தமிழ்நாடு அரசும், மெட்ரோ நிர்வாகமும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வரும் 26ந்தேதி நடத்தப்பட்ட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும்(45.4 கி.மீ), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பனிமனை வரையிலும் (26.1 கி.மீ), மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும்(44.6 கி.மீ) என சுமார் 116.1 கி.மீ தொலைவிற்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்திட்டத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஒட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ரூ. 1,215.92 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 8ஆம் நாள் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொண்டது. அதன் பிறகு முதல் ரயிலினை கடந்த செப்டம்பர் 22ஆம் நாள் தயாரித்து முடித்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலினை பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் சோதனை ஓட்டத்திற்காக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மூன்று பெட்டிகள் அடங்கிய முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்தாண்டு ஜனவரி இறுதிவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் மெட்ரோ பணிமனையில் 900 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள Test Driving Track-ல் வைத்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த 6 மாத காலம் பூந்தமல்லி முதல் போரூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை செல்லும் பிரதான வழிதடத்தில் குறிப்பிட்ட சில கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் நடைபெற உள்ள சோதனை ஓட்டத்தில் சிக்னல், பிரேக் பாயிண்ட், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சோதனைகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.