மதுரை அருகே சித்திரைத் திருவிழா கள்ளழகரை பார்க்க சென்ற இளைஞர்கள் அட்டூழியம்; மூன்று அரசு பேருந்தின் கண்ணாடிகள் உடைப்பு
மதுரை சித்திரைத் திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. கள்ளழகரை காண மதுரை மட்டுமன்றி மதுரை சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை மாநகரில் பகுதியில் கூடியிருந்தனர்.குறிப்பாக கள்ளழகரை காண நள்ளிரவில் ஏராளமான இளைஞர்கள் கும்பலாக மாநகரின் வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் உற்சாகமாக ஆடியும் பாடியும் வைகை ஆற்றை நோக்கி நடந்து சென்று வந்தனர். இந்த நிலையில் திருமங்கலம் டு மதுரை, ஆரப்பாளையம் டு திருமங்கலம், ராஜபாளையம் டு ஆரப்பாளையம் ஆகிய வழித்தடங்கள் வழியாக செல்லும் மூன்று அரசு பேருந்து மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இது தொடர்பாக பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சுப்பிரமணியபுரம் போலீசார் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை அங்குள்ள சிசிடிவி கேமரா உதவியுடன் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.