
தேனி மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு (33.தேனி) மக்களவை தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி, சோழவந்தான், ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் முன்னேற்பாடு தொடர்பான ஆய்வுக்கூட்டம் தேனி மக்களவை தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்ததாவது,
அனைத்து வாக்குச்சாவடி நிலையத்திலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் வசதி, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நிலை, தொலைபேசி வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல நிலையில் உள்ள சக்கர நாற்காலி வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து 100% ஆய்வு மேற்கொள்ள வேண்டும், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பணிகளுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாதிரி வாக்குப்பதிவு மையத்தை தேர்வு செய்ய வேண்டும், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குப்பதிவு மையங்களை கண்டறிந்து பட்டியல் வழங்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கம் செய்தல் போன்ற செயல்பாடுகள், பட்டியல் தயாரித்தல், வட்டாட்சியர் அலுவலகங்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும். சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பறை அமைத்தல் போன்ற தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் எந்தவித தொய்வின்றி தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருமதி ஷீலா, உதவி ஆணையர் (கலால்) திரு.ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திருமதி சாந்தி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் திரு.முத்துமாதவன், உத்தமபாளையம் மற்றும் உசிலம்பட்டி வட்டாட்சியர்கள், ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், உத்தமபாளையம், வாடிபட்டி மற்றும் உசிலம்பட்டி மற்றும் தனி வட்டாட்சியர் (தேர்தல்), தேனி தேர்தல் வட்டாட்சியர் திரு.செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
