• Fri. Jan 24th, 2025

சிவகங்கையில் அருள்மிகு மகாமாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

ByG.Suresh

Mar 18, 2024

சிவகங்கை அருகே ஆயுதப்படை குடியிருப்பு அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில் 25 -ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு அக்னி சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
கோயில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார்.
சனிக்கிழமை காலையில் பொங்கல் விழாவும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து இரவு 9 மணியளவில் சிவகங்கை நகர் கௌரி விநாயகர் கோயிலில் இருந்து கோயில் அர்ச்சகர் சந்திரசேகரசுவாமிகள் 108 அக்னிச்சட்டி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலை சென்றடைந்தார். தொடர்ந்து அம்மன் சந்நிதியில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.


நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (17.3.2024) காலை 11 மணிக்கு சிவகங்கை ஆயுதப்படைப்பிரிவு வாகன அதிகாரிகள், காவலர்கள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. அன்னதாக ஏற்பாடுகளை 2009 -ல் பணியில் சேர்ந்த காவல்துறை நண்பர்கள் செய்திருந்தனர்.
இதில், ஆயுதப்படை காவலர்கள், குடும்பத்தினர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனை அடுத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன இதில் சிறப்பு நடனம் ஆடி அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன