• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரசாந்த் கிஷோருக்கு ரூ.300 கோடிக்கு அசைன்மென்ட்?

2024 மக்களவை தேர்தலில் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய அணி உருவாக்க ரூ.300 கோடிக்கு பிரசாந்த் கிஷோரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மறுத்துள்ளார்.

மேலும் ”பிரசாந்த் கிஷோர் பணத்துக்காக பணி செய்யமாட்டார். நாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை” எனவும் தெரிவித்தார்.

2024ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

இதனால் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த சில வாரங்களாவே பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரையும் அவர் நேரடியாகச் சந்தித்தார். இந்த நடவடிக்கையானது 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் அவரது முயற்சியை உறுதி செய்துள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் சந்திர சேகரராவை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஐதராபாத் அருகே உள்ள பண்ணை வீட்டில் சந்தித்தார். 2024 மக்களவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இது தேசிய அரசியலில் கவனம் பெற்றது. இந்நிலையில் தான் பிரசாந்த் கிஷோர் உடனான சந்திப்பு குறித்து சந்திரசேகரராவ் சில விஷயங்களை கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

“தேசிய அளவில் மாற்றத்தை கொண்டு வருவது குறித்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். பிரசாந்த் கிஷோர் என்னுடன் இணைந்து செயல்படுகிறார். இதில் யாருக்கு என்ன பிரச்சனை? ஏன் அவரை வெடிகுண்டாக பார்க்கிறார்கள்? ஏன் அழுகிறார்கள்?” என கேள்வி எழுப்பினார்.

இந்த வேளையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ரூ.300 கோடிக்கு ஒப்பபந்தம் செய்யப்பட்டதா தகவல் வெளியாகிறதே என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சந்திரசேகரராவ், ”கடந்த 7-8 ஆண்டுகளாக பிரசாந்த் கிஷோர் எனது நல்ல நண்பராக உள்ளார். அவர் எப்போதும் பணத்துக்காக பணி செய்ய மாட்டார். மன்னிக்கவும், நாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன்” என முடித்தார்.