• Mon. Dec 9th, 2024

தருமபுரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம்.., விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தொடக்கம்..!

Byவிஷா

Jul 24, 2023

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, தருமபுரி, தொப்பூர், அரசு மேல்நிலைப் பள்ளியில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
ஏற்கனவே மகளிர் சுய உதவிக்குழுத் திட்டமும் தருமபுரியில்தான் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், தற்போது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்ற பெயரில் அறிவித்து, அதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக ஒரு கோடி பெண்களுக்கு இந்த உதவி தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மாதம் தோறும் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்த ரேஷன் கடைகள் மூலம் தகுதியானர்களை தேர்வு செய்து விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி கடந்த 20ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. அதன்படி, ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன்களையும் விண்ணப்பங்களையும் விநியோகித்தனர். இந்த பணி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்றது. இதுவரை மொத்தம் மகளிர் உரிமைத்தொகை பெற இதுவரை 91 லட்சத்து 36 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாகவும், கடந்த 20ம் தேதி முதல் 80சதவீதம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
இதையடுத்து, விண்ணப்பப்பதிவு மேற்கொள்ளும் இடம், நாள் ஆகிய தகவல்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் ஒதுக்கப்பட்ட முகாம்களுக்கு சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த முகாமை, தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே திமுக அரசு கொண்டு வந்த மகளிர் சுய உதவிக்குழுத் திட்டமும் திமுக ஆட்சியில் தருமபுரியில்தான் துவக்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.