தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உப்புக்கோட்டை டெம்புச்சேரி சாலையில் மதுவிலக்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்த தேவாரத்தைச் சேர்ந்த பாலமுருகன் கோம்பையைச் சேர்ந்த ஈஸ்வரன் ஆகிய இரண்டு நபர்களை பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் இருவர் வைத்திருந்த பையிலும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
ஏழு பொட்டலங்களில் சுமார் 14 கிலோ கஞ்சா சிக்கியது இதன் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம்.
இதனைத்தொடர்ந்து மதுவிலக்கு காவல்துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவருமே இருசக்கர வாகனத்தில் ஆந்திரா மாநிலம் விஜயவாடா சென்று கஞ்சா வாங்கி வந்ததாகவும் தேவாரம் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக சென்றதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் கைபேசிகளை பறிமுதல் செய்து மேலும் இந்த கடத்தல் வழக்கில் யாரேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி – விஜயவாடா 1000 கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கஞ்சா வாங்கி மீண்டும் விஜயவாடாவில் இருந்து தேனிக்கு 1000 கிலோ மீட்டர் பயணம் செய்து மற்ற மாவட்ட காவல்துறையினர் யார் கண்ணிலும் சிக்காமல் தேனி மதுவிலக்கு காவல்துறையினரிடம் இவர்கள் சிக்கியுள்ளனர்.
இவர்கள் மற்றும் இவரை போன்ற கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.