• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இனி ஒரு மணி நேரத்தில் கட்டணமில்லா சிகிச்சைக்கு ஒப்புதல்

Byவிஷா

Jun 1, 2024

மருத்துவக் காப்பீடு பெற்ற பயனரிடமிருந்து கோரிக்கை வரப்பெற்ற ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைகளில் கட்டணமில்லாத சிகிச்சை கிடைப்பதை காப்பீட்டு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுக் கழகம் அறிவுறுத்தியிருக்கிறது.
அதுபோல, மருத்துவமனையிலிருந்து பயனாளர் வீடு திரும்புவதற்கான மருத்துவ அறிக்கைக்கு காப்பீட்டுக் கழகம் மூன்று மணி நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இது குறித்து ஐஆர்டிஏஐ தரப்பிலிருந்து, மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மிக முக்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுக் கழகம் கூறியிருப்பதாவது, ஒருவேளை, பயனாளர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்கான அறிக்கைக்கு காப்பீட்டுக் கழகம் ஒப்புதல் அளிக்க தாமதிப்பதால், பயனாளருக்கு மருத்துவமனை தரப்பில் கூடுதல் கட்டணம் கேட்டால், அதனையும் மருத்துவக் காப்பீட்டுக் கழகமே ஏற்க வேண்டும்.
ஒருவேளை, சிகிச்சையின்போது மருத்துவக் காப்பீடு எடுத்திருப்பவர் உயிரிழக்க நேரிட்டால், உடனடியாக மருத்துவமனையிலிருந்து வரும் கட்டணத்தை செலுத்தவும், உயிரிழந்தவரின் உடல் உடனடியாக மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குக் கொண்டு செல்லவும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் 55 வகையான அறிவுறுத்தல்களோடு மிகப்பெரிய சுற்றறிக்கையை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுக் கழகம் அனுப்பியிருக்கிறது.
காப்பீடு பெற்றவர், உரிய நேரத்தில் 100 சதவீதம் கட்டணமில்லா சிகிச்சை பெற அனைத்து விதமான நடவடிக்கைகளையும் காப்பீட்டு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும், ஒருவேளை, தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே, காப்பீடு பெற்றவர் பணத்தை செலுத்தி சிகிச்சை பெற்றுக்கொண்டு பிறகு அதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு காப்பீட்டுப் பயனரின் உரிமைகோரலை நிராகரிப்பது என்பது, காப்பீட்டு நிறுவனத்தின் உரிமைகோரல் பரிசீலனைக் குழுவின் முன் அனுப்பப்படாமல் மேற்கொள்ளப்படக்கூடாது, ஒருவர் பல காப்பீடுகள் வைத்திருந்தால், எந்த காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவது என்பதை அவரே முடிவு செய்து கொள்ளலாம், முதலில் காண்பிக்கப்படும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் அதிகபட்ச தொகையை செலுத்தலாம், மீதத் தொகையை இதர காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.