பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம்நாட்டு முப்படைகளும் தாக்கி அழித்தன.

இதற்காக முப்படை வீரர்களுக்கும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூரில் வெற்றிகரமாக நடத்திய முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நிரவி-திருப்பட்டினம் தொகுதி பாஜக சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பொதுமக்கள், வியாபாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் கலந்து கொண்ட தேசிய கொடி பேரணி நடைபெற்றது.
முன்னதாக முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சால்வை நினைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலகம் பகுதியில் இருந்து துவங்கிய பேரணியில் புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர்கள் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், வி.எம்.சி.கணபதி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட நிரவி-திருப்பட்டினம் தொகுதி மக்கள் கலந்து கொண்டு முப்படை வீரர்கள் மற்றும் பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அமைச்சர் ஆகியோரை பாராட்டு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
திருப்பட்டினத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி திருப்பட்டினம் காந்தி பூங்காவில் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பேரணி முடிவடைந்தது. இப்பேரணியில் காரைக்கால் மாவட்ட தலைவர் முருகதாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.பொழிலன், தொகுதி தலைவர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.